Monday, 3rd June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

GST செலுத்தா விட்டால் சொத்துக்கள் முடக்கம்

டிசம்பர் 27, 2019 04:27

புதுடில்லி: தொடர்ந்து பலமுறை அறிவுறுத்திய பிறகும் ஜிஎஸ்டி செலுத்த தவறினால் அவர்களின் சொத்துக்கள் மற்றும் வங்கிக் கணக்குகளை முடக்கும் வகையில் விதிகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி பதிவு பெற்ற ஏறக்குறைய 1 கோடிக்கும் அதிகமானவர்கள் உரிய நேரத்திற்கு வரி செலுத்தாமல் உள்ளனர். இவர்களிடம் கண்டிப்பை காட்டவும், முறையாக ஜிஎஸ்டி செலுத்துவோரிடம் இணக்கமாக உறவை ஏற்படுத்தும் யுக்தியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. வரி பாக்கி வைத்திருப்போர் மீது மத்திய மறைமுக வரி மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க இந்த சட்டம் வழிவகை செய்ய உள்ளது.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ஒவ்வொரு மாதமும் 20 ம் தேதிக்குள் அதாவது, ஜிஎஸ்டிஆர்-3ஏ செலுத்துவதற்கான கால வரையறைக்கு 3 நாட்களுக்கு முன்பே வரியை செலுத்தி விட வேண்டும். குறித்த தேதிக்குள் வரியை செலுத்தாவிட்டால் நடவடிக்கை தொடர்பான எச்சரிக்கை தகவல் உரியவருக்கு அனுப்பப்படும். 5 நாட்களுக்கு பிறகு எலக்ட்ரானிக் முறையில் நோட்டீஸ் அனுப்பப்படும். வரி பாக்கியை செலுத்த 15 நாட்கள் அவகாசம் அளிக்கப்படும். அப்படியும் எந்த பதிலும் வரவில்லை என்றால் வரித்துறை அதிகாரிகள் நடவடிக்கையில் எடுப்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 30 நாட்களுக்குள் பாக்கியை செலுத்தாவிட்டால் சொத்துக்கள் பறிமுதல், சொத்துக்கள் மற்றும் வங்கிக் கணக்கு முடக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

தலைப்புச்செய்திகள்