Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நூதன முறையில் ஏடிஎம் கொள்ளை: பல்வேறு மாநிலங்களில் தேடப்பட்டு வந்த நபர் டெல்லியில் கைது

டிசம்பர் 22, 2019 11:56

புதுடெல்லி; சிசிடிவி கேமராக்களில் வண்ணப் பெயிண்ட்டைத் தெளித்து ஏழு மாநிலங்களில் ஏடிஎம் கொள்ளைகளில் ஈடுபட்டு வந்த நபரை போலீஸார் டெல்லியில் கைது செய்துள்ளனர். இந்நபரின் தலைக்கு வெகுமதிகள் அறிவிக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த நபர் என்றும் தெற்கு டெல்லி போலீஸார் இன்று தெரிவித்தனர்.

ஹரியாணாவின் பால்வால் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வாகில் (27). இவர் பல்வேறு மாநிலங்களில் ஏடிஎம்களை வேரோடு பிடுங்கியதில், சூறையாடியதில் பல முறை கைது செய்யப்பட்டவர். 15 வழக்குகளில் இவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டாலும் அதன் பின்னர் சில வழக்குகளில் சிக்காமல் தப்பிச் சென்றுவிட்ட நிலையில் காவல்துறைக்குத் தொடர்ந்து சவாலாக இருந்து வந்தார்.

இந்நிலையில் வாகிலைக் கைது செய்தது குறித்து காவல் துணை ஆணையர் (சிறப்பு செல்) பிரமோத் சிங் குஷ்வா கூறியதாவது:

கடந்த ஒன்றரை ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த வாகில் தலைக்கு உ.பி. காவல்துறை ரூ.50 ஆயிரமும், ம.பி. காவல்துறை ரூ.25 ஆயிரமும் வெகுமதி அறிவித்தது. உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஹரியாணா, ராஜஸ்தான், ஆந்திரா, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய ஏழு மாநிலங்களில் இதுபோன்ற 15க்கும் மேற்பட்ட வழக்குகளில் வாகில் சம்பந்தப்பட்டு குற்றம் சாட்டப்பட்டவர்.

நேற்று முன்தினம் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்ததை அடுத்து அவரை லாடோ சாராய் பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் இருந்து தெற்கு டெல்லி போலீஸார் கைது செய்தனர்.

காவலர்கள் இல்லாத அதிகம் ஆள் நடமாட்டமில்லாத தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் அமைந்துள்ள ஏடிஎம்களைத்தான் வாகில் குறிவைத்து கொள்ளையடிப்பதையும், ஏடிஎம்களில் நிறுவப்பட்ட சிசிடிவி கேமராக்களில் கொள்ளையடிப்பது தெரியாமல் இருப்பதற்காக கேமராக்களின் லென்ஸில் இங்க் மற்றும் வண்ணப் பெயிண்ட்டைத் தெளித்துவிடுவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேவாட்டின் ஜாம்ஷெட் கொள்ளைக் கும்பலின் உறுப்பினரான வாகில், ஏடிஎம்களை பெட்டிகளோடு அப்படியே சூறையாடிச் செல்வதிலும், ஏடிஎம்மிலிருந்து பணத்தைக் கொள்ளையடிப்பதிலும் கைதேர்ந்தவராக விளங்கியுள்ளார். அவருக்குப் பின்னால் இயங்கி வரும் கும்பலைப் பிடிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது’’.

இவ்வாறு பிரமோத் சிங் குஷ்வா தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்