Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

எங்க மாமாவுக்கு ஓட்டு போடுங்க: சிவகங்கையில் வாக்கு சேகரித்த பிரான்ஸ் பெண்

டிசம்பர் 15, 2019 09:28

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சித் தேர்தலுக்கு நண்பரின் உறவினருக்கு பிரான்ஸ் நாட்டு மாணவி வாக்கு கேட்டது கலகலப்பை ஏற்படுத்தியது.

வரும் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடக்கவுள்ள தேர்தலுக்கான மனுத்தாக்கல் கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்றது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் தேர்தல் சூடு பறக்க ஆரம்பித்துள்ளது. அதிகளவு பெண் வேட்பாளர்களும் போட்டியிட்டு வாக்கு சேகரித்து வருகின்றனர். சிவகங்கை கட்டாணிப்பட்டி ஊராட்சியில் நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்புவின் சின்ன மாமியார் தேர்தலில் போட்டியிடுவதால் கஞ்சா கருப்பும் வாக்கு சேகரித்துவருகிறார்.

சில இடங்களில் வெங்காய மாலையைக் கழுத்தில் மாட்டி வாக்கு சேகரிப்பும் நடைபெற்றது. இந்நிலையில் டிசம்பர் - 16ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யக் கடைசி நாள் என்பதால் திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்தில் பலரும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

அப்போது மேலாரங்கியம் ஊராட்சித் தலைவர் பதவிக்கு மருது பாண்டி என்பவர் வேட்பு மனுத் தாக்கல் செய்ய வந்த போது பிரான்ஸ் நாட்டு மாணவி ஜூயி பெல்லர் என்பவரும் வந்தார். அப்போது எல்லாரும் எங்க "மாமாவிற்கு ஓட்டு போடுங்க"என்று வெள்ளந்தியாக அவர் தெரிவித்தது சமூக வலைதளங்களில் விரைவாகப் பரவிக் கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து ஜூயி பெல்லர் செய்தியாளர்களிடம்..,"நான் கல்லூரி வாழ்க்கையில் அடியெடுத்து வைக்க உள்ளேன். அதனால் எனக்கு புத்துணர்வு தேவைப்பட்டதால் சுற்றுலா வந்தேன். பல்வேறு இடங்களுக்குச் சென்றுவரும் நான் தமிழகத்திற்கும் வந்துள்ளேன். என்னுடைய நண்பரின் உறவினர் தேர்தலில் நிற்பதாகத் தெரிவித்தார். அதனால் இதைப் பார்வையிட வந்தேன். இங்கு பலரும் ஆரவாரமாகத் தேர்தலை எதிர்கொள்வதால் எனக்கு புது அனுபவமாக இருக்கிறது. தமிழக கலாசாரம் மிகவும் பிடித்துள்ளது" என்றார்.

வேட்பாளர் மருது பாண்டி, "என்னுடைய மருமகனின் தோழிதான் `ஜூயி பெல்லர்'. உறவினர் இல்லை. தற்போது ஒரு உறவினர் போல மாறியுள்ளார். ஜூயி கிராமங்களைத் தேடிவந்து தற்போது தேர்தல் நடைமுறைகளைத் தெரிந்துகொள்ள வந்துள்ளார்" என்றார்.

தலைப்புச்செய்திகள்