Thursday, 23rd May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

48 ஆண்டுகளாக பாகிஸ்தான் சிறைகளில் வாடும் 54 இந்திய ராணுவ வீரர்கள்

மார்ச் 04, 2019 07:19

புதுடெல்லி: பாகிஸ்தான் சிறைகளில் 48 ஆண்டுகளாக வாடும் 54 இந்திய ராணுவ வீரர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.  

காஷ்மீரில்  தாக்குதல் நடத்த வந்த பாகிஸ்தான் போர்  விமானங்களுக்கு எதிரான பதிலடி நடவடிக்கையின்போது பாகிஸ்தானில் தரை இறங்கிய இந்திய விமானப்படை  விமானி அபிநந்தன் அந்த நாட்டு ராணுவத்திடம்  சிக்கி கொண்டார்.  

ஜெனீவா ஒப்பந்தத்தின் படியும், உலக நாடுகளின் நிர்ப்பந்தத்துக்கு பணிந்தும் 3 நாளில் அவரை பாகிஸ்தான் இந்தியாவிடம் ஒப்படைத்தது. இது நாட்டு மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியை  ஏற்படுத்தி உள்ளது.  

இவரைப்போன்று பாகிஸ்தான் சிறைகளில் வாடும் ராணுவ வீரர்களையும் மத்திய அரசு மீட்டு வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.  

1971-ம் ஆண்டு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த போரில் 54 ராணுவ வீரர்கள் மாயமானார்கள். அவர்களில 30 பேர் ராணுவத்தை சேர்ந்தவர்கள். இதில் ஒரு லெப்டினென்ட், 8 கேப்டன்கள், 2 பேர் இரண்டாம் நிலை லெப்டினென்டுகள், 6 மேஜர்கள், 2 சுபேதார்கள், 3 நாயக் லெப்டினென்ட்கள், ஒரு ஹவில்தார்,  5 துப்பாக்கியாளர்கள் மற்றும் 2 சிப்பாய்கள் அடங்குவர். இவர்கள் தவிர 24 பேர் இந்திய விமானப்படையை சேர்ந்தவர்கள். அவர்களில் 3 பேர் பைலட் அதிகாரிகள், ஒருவர் விங் கமாண்டர், 4 ஸ்குவாட்ரன் லீடர்கள் மற்றும் பைலட் லெப்டி ரான்ட்கள் ஆவர். இவர்கள் அனைவரும் பாகிஸ்தான் ராணுவத்தால்  கைது செய்யப்பட்டு அந்த நாட்டு சிறைகளில் 48 ஆண்டுகளாக கஷ்டப்பட்டு வருகின்றனர்.  

அவர்களை அங்கிருந்து மீட்டு தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இக்கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 48 ஆண்டுகளாக திரும்ப திரும்ப மனு அளித்தும், போராட்டம் நடத்தியும் அரசிடம் இருந்து எந்த தகவலும் இல்லை என தெரிவிக்கின்றனர்.  

பாகிஸ்தான்  பிடியில் ராணுவ வீரர்கள் இருப்பதற்கான  ஆதாரங்கள் மற்றும் சர்வதேச பத்திரிகை செய்திகள் குறித்த தகவல்களும்  அளிக்கப்பட்டன என ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் கூறுகின்றனர். 

1971-ம் ஆண்டு நடைபெற்ற போரின்போது மாயமான இந்திய விமானப்படை அதிகாரி லெப்டினென்ட் விஜய் வசந்த்தாம்பேயின் மனைவி தமயந்தி தாம்பே (70) கூறும்போது, "திருமணமான 18-வது மாதத்தில் போருக்கு சென்ற எனது கணவர் மாயமானார். அரசிடம்  ஆதாரத்துடன் கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.''  

இதுகுறித்து தகவல் அறிய சர்வதேச கோர்ட்டை நாட குஜராத்  ஐகோர்ட்டில் கடந்த 2013-ம் ஆண்டில் உத்தரவு பெற்றேன். அதற்கு மத்திய அரசு தடை உத்தரவு பெற்றது. தற்போது நான்  சொந்த  நாட்டுக்கு எதிராகவே கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து போராடி வருகிறேன்.  

இவரைப்போன்று பஞ்சாப் மாநிலம் மால்வா பகுதியை சேர்ந்த 4 ராணுவ வீரர்கள் பாகிஸ்தான் சிறைகளில் அடைக்கப்பட்டிருப்பார்கள் என அவர்களது குடும்பத்தினர் கருதுகின்றனர். அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளும் படி பஞ்சாப் மந்திரி நவ்ஜோத் சிங் சித்து மூலம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு மனு அளிக்க திட்டமிட்டுள்ளனர்.  

வங்காளதேச எல்லையில் பஞ்சாப் மாநிலம் பதிண்டா பகுதியில் லக்ரா துர்காட் கிராமத்தை  சேர்ந்த ஹவில்தார் தரம்பால்சிங் பாகிஸ்தான் ராணுவத்திடம் பிடிபட்டார். போரில் அவர் வீரமரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டார்.  

ஆனால் முன்னால் ராணுவ வீரர் அளித்த தகவலின் படி அவர் பாகிஸ்தான் சிறையில் கைதியாக உயிருடன் இருப்பது தெரிய வந்தது. இதே போன்று பரித்கோட்டை  சேர்ந்த எல்லை பாதுகாப்பு படைவீரர் சுர்ஜித்சிங்கும் பாகிஸ்தானின் காட்லாக்பத்  சிறையில் இருப்பதாக அவரது மனைவி ஆங்ரேஷ் கவுர், மகன் ஆம்ரிக் கவுர் தெரிவிக்கின்றனர்.  

வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜை  சந்தித்தனர். ஆனால்  எந்த  பயனும் இல்லை என  ஆம்ரிக் கவுர் கூறினார். நான் பிறந்த சில நாட்களிலேயே 1971 டிசம்பர் 4-ந்தேதி  எனது தந்தையை பாகிஸ்தான்  ராணுவம் பிடித்து சென்று விட்டது என்றும் வருத்தப்பட்டார்.  

இவர்களை  போன்று 1971-ம் ஆண்டு  போரில் பாகிஸ்தானிடம்  சிக்கிய ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.  அபிநந்தனை போன்று தங்களது குடும்பத்தை சேர்ந்த  ராணுவ வீரர்களையும் மீட்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

தலைப்புச்செய்திகள்