Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அரசு செவிலியராக பணி தொடங்கிய முதல் திருநங்கை

டிசம்பர் 11, 2019 12:43

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே உள்ள சேர்வைகாரன் மடம் கிராமத்தை சேர்ந்தவர் ரத்தினப்பாண்டி. மாற்றுத் திறனாளியான இவருக்கு தேன்மொழி என்ற மனைவியும், அன்புராஜ் என்ற மகனும் உள்ளனர். அன்புராஜ் தனது 13-வது வயதில் தான் திருநங்கையாக மாறியதை உணர்ந்தார்.

இதைத்தொடர்ந்து தனது மகன் திருநங்கையாக மாறிவிட்டார் என்பதை உணர்ந்த அவரது தாய் தேன்மொழி அவரை வெறுத்து ஒதுக்காமல் அன்புடன் அரவணைத்து சென்றார். இதைத்தொடர்ந்து அன்புராஜ் தனது பெயரை அன்பு ரூபி என மாற்றிக்கொண்டார். படிப்பில் நன்கு கவனம் செலுத்திய அன்பு ரூபி பிளஸ்-2 முடித்த பின் செவிலியர் கல்வி படிக்க முடிவு செய்தார்.

அரசு கலந்தாய்வில் பங்கேற்று பெற்றோர் ஆதரவுடன் நெல்லை மாவட் டத்தில் உள்ள செவிலியர் கல்லூரியில் சேர்ந்தார். அவர் கல்லூரியில் படித்து கொண்டிருந்த போது அவரது தந்தை ரத்தின பாண்டி மரணமடைந்தார். எனினும் அவரது தாய் தேன்மொழி ஊக்கத்தால் அன்பு ரூபி செவிலியர் படிப்பை நிறைவு செய்தார்.

இதைத்தொடர்ந்து தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற செவிலியர் பணிக்கான தேர்வில் அன்பு ரூபி தேர்ச்சி பெற்றார். இதையடுத்து கடந்த 2-ந்தேதி சென்னையில் நடைபெற்ற விழாவில் செவிலியர் பணிக்கான நியமன ஆணையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். அவருக்கு திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

இதன் மூலம் தமிழகத்தில் அரசு செவிலியராக பணி நியமனம் பெற்றுள்ள முதல் திருநங்கை என்ற பெருமையை அன்பு ரூபி பெற்றார். மேலும் அவர் தனது சொந்த மாவட்டமான தூத்துக்குடியிலேயே பணி வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். அவரது வேண்டுகோளை ஏற்று அவருக்கு விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு பணி மாறுதல் வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அவர் நேற்று விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் பணியில் சேர்ந்தார். தமிழகத்தில் முதல் திருநங்கை செவிலியரான அவரை விளாத்திகுளம் அரசு மருத்துவமனை நிலைய மருத்துவர் பிரசில்லா பூர்ணிமா, மருத்துவர் பேபி பொன் அருணா, சித்த மருத்துவர் தமிழ் அமுதன் உள்பட மருத்துவமனை ஊழியர்கள் வரவேற்று வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

எனது சொந்த மாவட்டமான தூத்துக்குடியில் உள்ள விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் பணியானை பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது. என்னால் முடிந்த வரை விளாத்திகுளம் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு நல்ல முறையில் செவிலியர் பணியின் மூலம் சேவை செய்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்