Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பாலியல் குற்றத்தில் ஈடுபட்டால் 21 நாட்களில் தூக்கு: ஜெகன்மோகன் ரெட்டி

டிசம்பர் 10, 2019 10:14

ஆந்திரா: இந்தியாவில் நிர்பயா வழக்கு முதல் திஷா வழக்கு வரை வார்த்தைகளில் விவரிக்க முடியாத பாலியல் அட்டூழியங்கள் நடந்துள்ளன. மேலும் மேலும் தொடர் குற்றங்கள் நடந்து வருவதால் இனியும் பொறுமையாக இருந்து பலனில்லை என ஆந்திர அரசு புதிய சட்ட மசோதாவை அறிவித்துள்ளது.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் 'திஷா' என்ற பெண் கால்நடை மருத்துவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை தெலங்கானா போலீசார் 24 மணி நேரத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

அவர்களிடமிருந்து வாக்கு மூலத்தை பெற்று கொண்ட போலீசார், திஷாவை குற்றவாளிகள் கொலை செய்தது எப்படி என்பதை விவரித்து காட்ட சம்பவம் நடந்த இடத்திற்கு அவர்களை அழைத்து சென்றனர். அப்போது குற்றவாளிகள் நான்கு பேரும் போலீசாரை தாக்கி விட்டு தப்பி செல்லும் முயற்சியில் என்கவுன்ட்டர் செய்யப்பட்டனர்.

இந்த செய்தி திஷாவை இழந்த பெற்றோருக்கும் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவை சபாஷ் போட வைத்தது. இந்த நிலையில் ஆந்திர முதலவர் ஜெகன் மோகன் ரெட்டியும் இந்த நடவடிக்கையை பாராட்டி தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இதையடுத்து ஆந்திர மாநிலத்தில் பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்கை ஒரு வாரத்தில் விசாரிக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு மூன்று வாரத்திற்குள் தண்டனை வழங்கும் சட்ட மசோதா இயற்றப்படவுள்ளது.

இதுகுறித்து சட்ட சபையில் பேசிய ஜெகன்மோகன் ரெட்டி '' நிர்பயா பெயரில் அனைத்து மாநிலங்களிலும் சட்டத்தை இயற்றியுள்ளோம். ஆனால் 7 ஆண்டுகள் ஆகியும் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கவில்லை. பாலியல் குற்றவாளிகளுக்கு சீக்கிரமாக தண்டனை வழங்குவதே நல்லது.

தெலங்கானா பெண் மருத்துவர் கொல்லப்பட்டதை அறிந்து ஒரு தந்தையாக நான் மிகவும் துயரப்பட்டேன். அந்த குற்றவாளிகள் என்கவுன்ட்டரில் சுட்டு கொல்லப்பட்டதை அடுத்து சற்று நிம்மதி அளித்தது. இதை நான் வரவேற்கிறேன். ஆந்திராவிலும் அதை போல சட்டத்தை இயற்ற வேண்டும். பாலியல் குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக தூக்கு தண்டனையை 21 நாட்களில் வழங்க வேண்டும்'' என கூறினார். 

தலைப்புச்செய்திகள்