Monday, 3rd June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொலை வழக்கு- கைதான மாணவர் கல்லூரியில் தொடர்ந்து படிக்க அனுமதி: மதுரை கிளை

டிசம்பர் 02, 2019 07:34

மதுரை: தூத்துக்குடியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் கடந்த 2017-ம் ஆண்டு படித்து வந்த 19 வயது மாணவர் அந்த பகுதியில் நடந்த இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். அவர் மீது முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்ட நிலையில் ஜாமீனில் வெளி வந்த மாணவர் மீண்டும் கல்லூரியில் படிப்பை தொடர சென்ற போது கல்லூரி நிர்வாகம் அனுமதி மறுத்து விட்டது. கல்லூரி முடிவை எதிர்த்து அந்த மாணவர் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி எம்.சுந்தர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களை கேட்ட பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட காரணத்துக்காக படிப்பை தொடர அனுமதி மறுப்பது குறித்து உச்சநீதிமன்றம் மற்றும் ஐகோர்ட்டுகளின் பல்வேறு   வழிகாட்டுதல்கள் ஆராயப்பட்டது.

முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட மாணவர் தற்போது 5-வது செமஸ்டர் தேர்வுக்காக கல்லூரியில் சேர்ந்து படிக்க அனுமதி அளிக்க கோரியுள்ளார். முதல் தகவல் அறிக்கையை மட்டும் வைத்து கல்லூரி படிப்பை மறுக்கக்கூடாது.

எனவே சம்பந்தப்பட்ட தனியார் கல்லூரி நிர்வாகம் மாணவரின் கோரிக்கையை பரிசீலனை செய்து  செமஸ்டர் படிப்பை தொடர அனுமதி வழங்க வேண்டும். வருகிற 2020-ம் ஆண்டு ஜூன் மாதம்  நடைபெறும் செமஸ்டர் தேர்வு எழுதவும் அந்த மாணவருக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று  உத்தரவிட்டார்.

தலைப்புச்செய்திகள்