Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தெலுங்கானாவில் டாக்டர் பலாத்காரம்: 3 போலீஸ் சஸ்பெண்ட்

டிசம்பர் 01, 2019 11:24

ஐதராபாத்: தெலுங்கானாவில் பெண் டாக்டர் பணி முடிந்து திரும்பிய போது 4 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, எரித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தெலுங்கானாவில் பெண் டாக்டர் எரித்து கொல்லப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 4 பேருக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் விரிவாக விசாரணை நடத்தி, உரிய நேரத்தில் எப்ஐஆர் பதிவு செய்யாத 3 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

குற்றவாளிகளை விரைவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும் என நூற்றுக்கணக்கானவர்கள் ஷாத்நகர் போலீஸ் ஸ்டேஷன் முன்பு கூடி போராட்டம் நடத்தினர். சில்குர் பாலாஜி கோயிலில் புரோகிதர்கள் மற்றும் பக்தர்கள், நாட்டில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக சிறப்பு பிரார்த்தனை நடத்தினர். தொடர்ந்து 20 நிமிடங்கள் கோயில் வாயில் கதவுகளை பூட்டி அவர்கள் போராட்டம் நடத்தினர்.

உரிய நேரத்தில் போலீசார் தங்களின் புகாரை பெற்று, நடவடிக்கை எடுத்திருந்தால், தங்களின் மகளின் உயிர் காப்பாற்றப்பட்டிருக்கும் என பெண் டாக்டரின் குடும்பத்தினர் குற்றம்சாட்டி இருந்தனர். இது தொடர்பாக பேசிய மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களும் பொது மக்களின் புகார்களை பெற்று கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும். எப்ஐஆர் பிறகு பதிவு செய்து கொள்ளட்டும். முதலில் அப்பெண்ணை தேடுவதற்கு அவர்கள், குடும்பத்தினருக்கு உதவி இருக்க வேண்டும் என்றார்.

நவ.,27 அன்று இரவு அப்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதும், மறுநாள் அதிகாலை 2.30 மணிக்கு அப்பெண் தீவைத்து எரிக்கப்பட்டதும் முதல்கட்ட ஆதாரங்களின் அடிப்படையில் தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.எரிந்த நிலையில் பெண் டாக்டரின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட பகுதிக்கு சிறிது தூரத்தில் மற்றொரு பெண்ணின் உடலும் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இவ்விரு சம்பவங்களுக்கும் தொடர்பு உள்ளதா என ஷம்சாபாத் போலீஸ் இதுவரை உறுதிப்படுத்தவில்லை.

தலைப்புச்செய்திகள்