Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருமணம் செய்வதாக ஏமாற்றி தாதாவை பிடித்த பெண் சப்-இன்ஸ்பெக்டர்

நவம்பர் 30, 2019 10:52

போபால்: மத்தியபிரதேச மாநிலம் சத்தர்பூர் பகுதியை சேர்ந்தவன் பால்கிஷ்சன் சவ்பே. இவன் மத்தியபிரதேசத்தில் மிகப்பெரிய தாதாவாக இருப்பவன். இவன் மீது அந்த மாநிலத்தில் மட்டும் 16 கொலை வழக்குகள் உள்ளன. உத்தரபிரதேசத்திலும் இவன் கைவரிசை காட்டி வந்தான். அம்மாநிலத்தில் பால்கிஷ்சன் மீது பல கொள்ளை வழக்குகள் உள்ளன. இதனால் அவனை பிடிப்பதற்கு மத்தியபிரதேச- உத்தரபிரதேச மாநில போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.

இரு மாநில எல்லைப்பகுதியில் நடமாடிய அவனை போலீஸ்காரர்களால் பிடிக்க முடியவில்லை. இதனால் அவனை நூதனமான முறையில் பிடிக்க பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் முடிவு செய்தார். அந்த பெண் சப்-இன்ஸ்பெக்டரின் பெயர் மாதவி அக்னி கோத்திரி. 28 வயதாகும் அவர் பல்கலைக்கழக அளவில் விளையாட்டு வீராங்கனையாக திகழ்ந்தவர். அவர் முதல் திட்டமாக தாதாவாக வலம் வந்த பால்கிஷ்சனின் பழக்க வழக்கங்களை ஆய்வு செய்தார்.

அப்போது தாதா பால்கிஷ்சன் பெண்கள் வி‌ஷயத்தில் மிகவும் பலவீனமானவன் என்பது தெரியவந்தது. அதோடு அவன் பேஸ்புக்கில் தனக்கு என ஒரு பக்கத்தை உருவாக்கி பெண்களுடன் பேசி வருவதையும் கண்டு பிடித்தார். உடனே அந்த பேஸ்புக் பக்கம் மூலம் தாதா பால்கிஷ்சனிடம் பெண் சப்-இன்ஸ்பெக்டர் மாதவி அக்னி கோத்திரி தொடர்பு கொண்டார்.

அவர் தனது பெயரை ராதா என்று கூறி அறிமுகம் செய்தார். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த தான் சாதாரண வேலை ஒன்றை பார்த்து வருவதாகவும் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து பால்கிஷ்சனிடம் சாமர்த்தியமாக பேசி அவனது தொலைபேசி எண்ணையும் வாங்கினார்.

செல்போனில் மணிக்கணக்கில் பால்கிஷ்சனிடம் அவர் உருக உருக பேசினார். இதனால் பால்கிஷ்சன் மனம் தடுமாறியது. அவன் உத்தரபிரதேச - மத்தியபிரதேச எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு கோவிலை குறிப்பிட்டு அங்கு வரும்படி மாதவியிடம் கூறியிருந்தான். உடனடியாக அந்த கோவில் பகுதியில் சாதாரண உடையில் போலீஸ்காரர்களை மாதவி நிறுத்தினார்.

பால்கிஷ்சனிடம் போனில் தொடர்பு கொண்டு, “நான் இளம்சிவப்பு நிறத்தில் சல்வார்-குர்தா அணிந்து இருக்கிறேன், எளிதாக என்னை கண்டுபிடித்து விடலாம்” என்று கூறினார். அதை நம்பி தாதா பால்கிஷ்சன் மோட்டார் சைக்கிளில் தன்னந்தனியாக வந்தான். மாதவியை அவன் நெருங்கிய அடுத்த நிமிடம் சாதாரண உடையில் இருந்த போலீசார் கைது செய்தனர். இதை சற்றும் எதிர்பார்க்காத தாதா பால்கிஷ்சன் அதிர்ச்சி அடைந்தான்.

அப்போது இளம்சிவப்பு சல்வார் உடையில் வந்த பெண் சப்-இன்ஸ்பெக்டர் மாதவி சிரித்தபடியே, “ராதா வந்துவிட்டேன்” என்றார். அப்போது தாதா பால்கிஷ்சன் அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்றான். நூதனமான முறையில் திருமணம் செய்வதாக ஏமாற்றி தாதாவை கைது செய்த சப்-இன்ஸ்பெக்டர் மாதவிக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

தலைப்புச்செய்திகள்