Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஐதராபாத்: பெண் டாக்டர் எரித்துக் கொலை

நவம்பர் 29, 2019 06:25

ஐதராபாத்: ஐதராபாத்தைச் சேர்ந்தவர் டாக்டர் பிரியங்கா ரெட்டி (வயது 26). கொல்லப்பூரில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றிவந்தார். நேற்று முன்தினம் மாலை, வழக்கம்போல் பணிமுடிந்து வீட்டுக்கு வந்த அவர், உடனடியாக ஒரு டாக்டரை பார்ப்பதற்காக கச்சிபவுலிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். 

அப்போது அவரது இருசக்கர வாகனம் பஞ்சராகியுள்ளது. லாரி டிரைவர் ஒருவர், பஞ்சர் ஒட்டித் தர உதவிசெய்ய முன்வந்துள்ளார். இந்தத் தகவலை தன் குடும்பத்தினருக்கு செல்போன் மூலம் தெரிவித்தார்.

இரவு 9 மணிக்கு, தன் சகோதரிக்கு மீண்டும் தொடர்புகொண்ட பிரியங்கா, ‘பைக் பஞ்சர் ஆகிவிட்டது. தொண்டுபள்ளி ஓஆர்ஆர் டோல்கேட் அருகில்தான் இப்போது இருக்கிறேன். எனக்கு பதற்றமாக இருக்கிறது. நீ என்னுடன் பேசிக்கொண்டே இரு” எனக் கூறியுள்ளார். சிறிது நேரத்தில், அவரது செல்போன் ஸ்விட்ச் ஆஃப் ஆனது. 

இதனால் பதறிப்போன குடும்பத்தினர், அந்த டோல்கேட் பகுதிக்கு விரைந்துள்ளனர். ஆனால், அப்போது பிரியங்கா அங்கு இல்லை. இதனால் பதற்றமடைந்த அவர்கள், ஷாம்ஷாபாத் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வந்தனர். 

இந்நிலையில், ஐதராபாத் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் ஷாத்நகர் பகுதியில் உள்ள ஒரு பாலத்துக்குக் கீழே இளம்பெண்ணின் சடலம் பாதி எரிக்கப்பட்ட நிலையில் கிடப்பதாக போலீசாருக்குத் தகவல் வந்தது. போலீசார் சென்று,  சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அது பிரியங்கா எனத் தெரியவந்தது. 

டோல்கேட் அருகே  உள்ள ஒரு கட்டிடத்தை போலீசார் சோதனை செய்தபோது, அங்கு ஒரு ஜோடி காலணி, உள்ளாடைகள், ஒரு பர்ஸ் மற்றும் ஒரு காலி மது பாட்டில் கிடந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.  

இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் மற்றும் கிளீனரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரியங்கா வரும்போது, டோல்கேட் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். 

தலைப்புச்செய்திகள்