Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

13 பேரும் கிராமத்துக்குள் நுழைய ஏன் தடை விதிக்கக் கூடாது?: மதுரை கிளை

நவம்பர் 27, 2019 08:50

மதுரை: மேலவளவு கொலை வழக்கில் விடுதலையான 13 பேரும் கிராமத்துக்குள் நுழைய ஏன் தடை விதிக்கக் கூடாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். கடந்த 1996-ம் ஆண்டு ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த முருகேசன் என்பவர் மேலவளவு பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

இதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக முருகேசன் உட்பட 6 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 17 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. அதனை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது.

ஏற்கெனவே, அண்ணா பிறந்தநாளில் அவர்களில் மூன்று பேர் நன்னடத்தை காரணமாக முன்விடுதலை செய்யப்பட்டனர். மீதமுள்ள 14 பேரில் ஒருவர் உயிரிழந்த நிலையில், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மீதமுள்ள 13 பேர் முன்விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

13 பேர் விடுதலை செய்யப்பட்டது, அநீதியனாது. 13 பேர் விடுதலை செய்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்ற முறையீட்டு மனுவின் விசாரணை வந்தபோது விடுதலையான 13 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (புதன்கிழமை) மதியம் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் 13 பேர் விடுதலையில் உரிய விதிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன. வேண்டுமென்றே சர்ச்சைகள் கிளப்பப்பட்டு வருகின்றன எனத் தெரிவிக்கப்பட்டது.

விசாரணையின் போது நீதிபதிகள் தரப்பில், "மேலவளவு பஞ்சாயத்து தலைவர் முருகேசன் உள்ளிட்ட 6 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்ட 13 பேரும் மேலவளவு கிராமத்திற்குள் நுழையக் கூடாது என ஏன் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது" என வினவினர்.

இந்த வழக்கு சம்பந்தமாக விரிவான உத்தரவு பிறப்பிப்பதற்காக வழக்கு விசாரணையை மதியம் 2 : 15 மணிக்கு ஒத்திவைத்துள்ளனர். மதிய விசாரணையின்போது 13 பேர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட தருணத்தில் பெறப்பட்ட பிரமாணப் பத்திரங்களைத் தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

தலைப்புச்செய்திகள்