Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

போலீசாரை தாக்கிய ரவுடி கைது

நவம்பர் 23, 2019 09:46

திருப்போரூர்: சென்னை காசிமேடு சிங்காரவேலர் நகரை சேர்ந்தவர் பாபு என்ற பல்சர் பாபு (வயது 30). பிரபல ரவுடி. இவர் மீது சென்னை மற்றும் ஆந்திர மாநிலம் காளஹஸ்தி, புத்தூர் போலீஸ் நிலையங்களில் கொள்ளை வழக்குகள் உள்ளன. கடந்த மாதம் நடந்த ஒரு கொள்ளை வழக்கில் புத்தூர் போலீசார் பாபுவை பிடித்து, போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரித்து கொண்டிருந்தனர். அப்போது போலீசாரிடம் இருந்து பாபு தப்பினார். 

இந்தநிலையில், நேற்றுமுன்தினம் சென்னை காசிமேட்டில் உள்ள பாபு வீடு அமைந்துள்ள பகுதியில் சென்னை போலீசாரின் உதவியுடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அவரது செல்போன் சிக்னல், கிழக்கு கடற்கரை சாலை கோவளம் பகுதியில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து கேளம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இதை தொடர்ந்து, கேளம்பாக்கம் போலீஸ் ஏட்டு சுதர்சன், போலீஸ் நண்பர்கள் குழுவை சேர்ந்த ராஜேஷ் என்பவருடன் கோவளம் சுங்கச்சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பாபு, மோட்டார்சைக்கிளில் அங்கு சென்றார். போலீசாரின் சோதனையை கண்ட அவர், மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டு விட்டு தப்பி ஓட முயன்றார்.

இதை பார்த்த போலீஸ் ஏட்டு சுதர்சன் மற்றும் ராஜேஷ், பாபுவை மடக்கி பிடித்தனர். அப்போது அவரது கையில் இருந்த தகடு போன்ற பொருளால் இருவரையும் பாபு தாக்கினார்.

இதில் ராஜேஷ் கழுத்தில் காயம் ஏற்பட்டது. சுதர்சனை, தனது பல்லால் கடித்தார். இருப்பினும் அவர்கள், விடாமல் போராடி பாபுவை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். போலீசாரை தாக்க முயன்றதாக பாபு மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தலைப்புச்செய்திகள்