Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பேராசிரியை நிர்மலா தேவிக்கு பிடி ஆணை பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவு

நவம்பர் 18, 2019 09:18

ஸ்ரீவில்லிபுத்தூர்: பேராசிரியை நிர்மலாதேவிக்கு பிடி ஆணை பிறப்பித்து ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றம் இன்று (திங்கள்கிழமை) உத்தரவிட்டது. கல்லூரி மாணவிகளைத் தவறாக வழி நடத்தியதாக விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார்.

இவ்வழக்கு விருதுநகர் சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றப்பட்டது. அதை எடுத்து பேராசிரியை நிர்மலா தேவிக்கு உடந்தையாக செயல்பட்டதாக மதுரை காமராசர் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன் மற்றும் ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

தற்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று (நவ.18) நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது சம்பந்தப்பட்ட சாட்சிகள் மற்றும் கல்லூரி மாணவிகள் ஆகியோரிடம் ரகசிய வாக்குமூலம் பெறப்பட்டது.

மேலும் வழக்கில் தொடர்புடைய உதவிப் பேராசிரியர் முருகன் மற்றும் ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். பேராசிரியை நிர்மலா தேவி வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் இன்று ஆஜராகவில்லை.

மேலும் அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சிகிச்சைக்காக திருநெல்வேலி அழைத்துச் செல்ல படுவதாகவும் கூறி அவரது வழக்கறிஞர் சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி பரிமளா, பேராசிரியை நிர்மலா தேவியிக்கு பிடி ஆணை பிறப்பித்து உத்தரவிட்டார். மேலும் இவ்வழக்கு விசாரணையை இம்மாதம் 28-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

தலைப்புச்செய்திகள்