Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில் முடங்கிய இ-சேவை மையங்கள்

நவம்பர் 10, 2019 03:47

சென்னை: தமிழகத்தில் சொத்து வரி, மின் கட்டணம், குடிநீர் மற்றும் கழிவு நீர் அகற்றல் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு வரிகளையும், கட்டணங்களை செலுத்தும் வகையில் சென்னையில் பத்து இடங்களில் இ-சேவை மையங்கள் துவக்கி வைக்கப்படும் என்று 2013-2014ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி, முதற்கட்டமாக 24.02.2014 அன்று தகவல் தொழில்நுட்பவியல் துறையின் மூலம் சென்னையில் இ-சேவை மையங்கள் தமிழக அரசால் தொடங்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு மின்னணு நிறுவனம் மூலமாக தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களிலும் இ-சேவை மையம் விரிவாக்கம் செய்யப்பட்டது. தற்போது, அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் கீழ் 486 இ-சேவை மையங்கள் தமிழகம் முழுவதும் செயல்படுகிறது. இந்த இ-சேவை மையங்கள் மூலம், வருமான சான்றிதழ், சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், குடும்பத்தில் பட்டதாரி இல்லை என்பதற்கான சான்றிதழ், கணவனால் கைவிடப்பட்டோருக்கான சான்றிதழ் போன்ற வருவாய்த்துறையின் சான்றிதழ்களை வழங்கும் சேவைகளும், முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவி திட்டம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண நிதி உதவி திட்டம், ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் திருமண நிதி உதவி திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதி உதவி திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்களுக்கான  திருமண நிதி உதவி திட்டம் போன்ற சமூகநலத் துறை திட்டங்கள் சார்ந்த சுமார் 100க்கும் மேற்பட்ட சேவைகளும் வழங்கப்படுகிறது.

இதையும் தவிர்த்து மக்களின் அன்றாட தேவையான திட்டங்களை இ-சேவை மையம் மூலம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, மின்னணு ரேஷன் கார்டில் உள்ள படங்களை மாற்றம் செய்வது, பெயர் திருத்தம் மற்றும் ஆதார் கார்ட்டில் உள்ள பெயர்கள், படம், விலாசம் திருத்தம் செய்வது, வாக்காளர் அடையாள அட்டையில் புதிதாக கலர் படம் மாற்றுவது, பெயர் திருத்தம் உள்ளிட்ட பணிகளையும் இ-சேவை மையத்தில் பணம் கட்டி பெறலாம் என்று அறிவிக்கப்பட்டது. 

ஆனால், சமீப காலமாக இந்த இ-சேவை மையங்களுக்கு பொதுமக்கள் எப்போது சென்றாலும், குறிப்பிட்ட சான்றிதழ்களையோ, ஆதார் அட்டையில் திருத்தம், மின்னணு ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை இவை எதையும் பெற முடியவில்லை. சர்வர் பழுதாகியுள்ளது. பிறகு வாருங்கள் என்று அலைக்கழிக்கப்படுகிறார்கள்.இதனால் அரசின் சலுகை மற்றும் கல்வி கடன் பெற முடியாமல் பொதுமக்கள் அவதிப்படுவதோடு, ஆரம்ப பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க முடியாமல் பெற்றோர்கள் சிரமப்படும் நிலை உள்ளது. 

தலைப்புச்செய்திகள்