Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

முதல்-மந்திரி பதவி: சிவசேனாவின் பிடிவாதம் ஏன்?: பரபரப்பு தகவல்கள்

நவம்பர் 09, 2019 06:13

மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவில் ஆரம்பகாலத்தில் காங்கிரஸ் கட்சி மட்டுமே அசைக்க முடியாத கட்சியாக இருந்தது. விவசாயிகள் உழைப்பாளர் கட்சி மட்டுமே காங்கிரசுக்கு எதிராக ஒரு சில தொகுதிகளில் வெற்றிபெற்று வந்தது.

1980-ம் ஆண்டுக்கு பிறகு விவசாயிகள் உழைப்பாளர் யின் இடத்தை ஜனதா, பாரதீய ஜனதா கட்சிகள் பிடித்தன. எனினும் அந்த கட்சிகளால் பெரிய வெற்றியை பெற முடியவில்லை.

இந்த நிலையில் பால்தாக்கரே நிறுவிய சிவசேனா வேகமான வளர்ச்சியை கண்டது. முதல் முறையாக 1990-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் சிவசேனா, பா.ஜனதா கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அப்போது சிவசேனா 52 இடங்களிலும், பா.ஜனதா 42 இடங்களிலும் வெற்றி பெற்றது.

இந்தநிலையில் 1995-ம் ஆண்டு சிவசேனா- பா.ஜனதா கூட்டணி ஆட்சியை கைப்பற்றியது.அந்த தேர்தலில் சிவசேனாவுக்கு 73 தொகுதிகளும், பா.ஜனதாவுக்கு 65 இடங்களும் கிடைத்தன. சிவசேனாவை சேர்ந்த மனோகர் ஜோஷி முதல்-மந்திரி ஆனார். பா.ஜனதா துணை முதல்-மந்திரி பதவியுடன் திருப்தி அடைந்தது.

இந்தநிலையில் 2014-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பா.ஜனதா, சிவசேனா இடையே தொகுதி பங்கீட்டில் பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து 2 கட்சிகளும் தனியாக தேர்தலை சந்தித்தன. இதில் பா.ஜனதா 122 இடங்களிலும், சிவசேனா 63 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இது சிவசேனாவுக்கு பெரும் பின்னடைவாக கருதப்பட்டது.

எனினும் இந்துத்வா கொள்கையால் நடந்து முடிந்த பராளுமன்ற தேர்தலில் சிவசேனா, பாரதீய ஜனதாவுடன் இணைந்து தேர்தலை சந்தித்தது. அப்போதும் சிவசேனா, பாரதீய ஜனதாவை விட குறைவான இடங்களில் தான் போட்டியிட்டது. பா.ஜனதா 23 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், சிவசேனா 18 இடங்களை கைப்பற்றியது.

இதேபோல நடந்து முடிந்த சட்டசபை தேர்தலிலும் பா.ஜனதா 164 தொகுதிகளில் போட்டியிட்டது. சிவசேனா 124 இடங்களில் களம் கண்டது. தேர்தலில் பா.ஜனதா 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றன.

இந்தநிலையில் தேர்தல் முடிவு வந்தவுடன் சிவசேனாவுக்கு 2½ ஆண்டுகள் முதல்-மந்திரி பதவிவேண்டும் என அக்கட்சி அறிவித்தது. இதற்கு பா.ஜனதா, சிவசேனாவுக்கு முதல்-மந்திரி பதவி தர முடியாது என பகிரங்கமாக அறிவித்தது.இந்த மோதல் காரணமாக பாரதீய ஜனதா, சிவசேனா கூட்டணி அரசு அமையாமல் போய் விட்டது. முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பதவியை ராஜினாமா செய்து விட்டார்.

முதல்-மந்திரி பதவி வேண்டும் என்பதில் சிவசேனா பிடிவாதமாக உள்ளது. முதல்-மந்திரி பதவியில் 20 ஆண்டுகளுக்கு மேல் இல்லாததால் மாநிலத்தில் தனது செல்வாக்கு சரிந்து வருவதாக சிவசேனா கருதுகிறது. குறிப்பாக தனக்கு கீழ் செயல்பட்ட பாரதீய ஜனதா தன்னை விட மிஞ்சுவதை சிவசேனா விரும்பவில்லை. தேசிய கட்சியான பாரதீய ஜனதாவின் வளர்ச்சியால் மாநிலத்தில் தனக்கு செல்வாக்கு இல்லாமல் போய் விடும் என்ற பயமும் சிவசேனாவுக்கு இல்லாமல் இல்லை.

இதேபோல முதல் முறையாக தேர்தல் அரசியலுக்கு வந்த பால் தாக்கரே குடும்பத்தை சேர்ந்த ஆதித்ய தாக்கரேயை முதல்-மந்திரி ஆக்க வேண்டும் என்ற ஆசையும் அந்த கட்சிக்கு உள்ளது. எனவே தான் அந்த கட்சி முதல்-மந்திரி பதவியை பிடிக்க பிடிவாதமாக இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

தலைப்புச்செய்திகள்