Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

6 ஆண்டுகளுக்கு மேல் ஆன கட்சிகளுக்கு உள்ளாட்சி தேர்தலில் பொது சின்னம்

நவம்பர் 07, 2019 03:09

சென்னை: உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகளை, மாநில தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. இதன்படி டிசம்பர் முதல் வாரத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து 3 கட்டங்களாக தேர்தல் நடக்கும் என்றும் கூறப்படுகிறது. 

இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல்  பணிகளில் ஈடுபடும் பணியாளர்களுக்கான பயிற்சி உடனடியாக தொடங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. அதன்படி உள்ளாட்சி தேர்தலில் பணியாற்றும் அதிகாரிகளுக்கான பயிற்சி முகாம் கடந்த 2 நாட்களாக சென்னையில் நடைபெற்றது.

இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலில் கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக புதிய அறிவிப்பாணை ஒன்றை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன்படி பதிவு செய்யப்பட்டு 6 ஆண்டுகளுக்கு மேல் ஆன கட்சிகளுக்கு  நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் பொதுச் சின்னம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதைப்போன்று முன்பு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்றும் தற்போது அங்கீகாரத்தை இழந்துள்ள கட்சிகளுக்கும் பொதுசின்னம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பத்தை தேர்தல் அறிவிப்பு வெளியான 3 நாட்களுக்குள் மாநில தேர்தல் ஆணையத்திடம் அளிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அறிவிப்பின்படி விசிக, மதிமுக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளுக்கு பொதுசின்னம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. 

இதற்கு முன்பாக மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகளாக காங்கிரஸ், பாஜ, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ், திரிணாமூல் காங்கிரஸ், மாநில  கட்சிகளான திமுக, அதிமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுக்கு அவர்களின் சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. மேலும் பதிவு செய்யப்பட்ட 247 கட்சிகளுக்கு தனி சின்னம் ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

தலைப்புச்செய்திகள்