Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொள்ளையர்கள் தமிழகத்தில் சுதந்திரமாக நடமாடுகின்றனர்: முத்தரசன் குற்றச்சாட்டு

நவம்பர் 04, 2019 11:19

விருதுநகர்: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதால் கொள்ளையர்கள் சுதந்திரமாக நடமாடுகின்றனர் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர்  முத்தரசன் குற்றம் சாட்டியுள்ளார். விருதுநகரில் தியாகி சங்கரலிங்கனார் சிலைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் நேற்று மாலை அணிவித்து மரியாதை  செய்தார். 

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு என பெயர் சூட்டக்கோரி, உயிர்த் தியாகம் செய்த சங்கரலிங்கனாருக்கு, தமிழக அரசு ஆண்டுதோறும் விழா எடுக்க வேண்டும். தமிழகத்திற்கு  தனிக்கொடி உருவாக்குவதில் தவறில்லை. நாடு தழுவிய வகையில் தேசியக்கொடி உள்ளது. மாநிலங்களுக்கு தனிக்கொடி உருவாக்குவது குறித்து  விவாதம் நடத்த வேண்டும்.

விவசாயிகள் கார்பரேட் நிறுவனங்களோடு ஒப்பந்தம் செய்யும் முறையை, தமிழக அரசு சட்டமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றி, குடியரசு தலைவரின்  ஒப்புதல் பெற்றுள்ளது. எந்த மாநிலமும் இந்த சட்டத்தை நிறைவேற்றவில்லை. நீட் தேர்விற்கு விலக்கு வேண்டும் என சட்டமன்றத்தில்  நிறைவேற்றிய சட்டத்தை, மத்திய அரசு நிராகரித்துள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யும் முறையால் விவசாயிகள் பாதிக்கப்படுவர். விளைபொருட்களுக்கு விலையை நிர்ணயம் செய்கிற பொறுப்பை மத்திய அரசு தட்டிக் கழிக்கிறது. 

பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய்  நிறுவனங்கள் தினசரி நிர்ணயிப்பது போல, விவசாயப் பொருட்களுக்கும் கார்பரேட் நிறுவனங்கள் விலை நிர்ணயிக்கும் நிலை வரும். இதனால்,  கார்பரேட்டுகளிடம் விவசாயிகள் கொத்தடிமையாக மாறும் நிலை உருவாகும். எனவே, அந்த சட்டத்தை அனுமதிக்க கூடாது.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதால் கொள்ளையர்கள் சுதந்திரமாக நடமாடுகின்றனர். திருச்சியில் தொடர் கொள்ளைகள் நடக்கின்றன.  பெண்கள் நடந்து செல்ல முடியவில்லை. செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கூலிப்படையினர் மூலம் பல கொலைகள் நடக்கின்றன.  இதை மூடி மறைத்து சட்டம் ஒழுங்கு மேன்மையாக இருப்பதாக முதல்வர் கூறுகிறார்.

பொள்ளாச்சியில் நடந்த கொடூரமான சம்பவத்தை, தமிழகத்தில்  உயர் பொறுப்பில் உள்ளவர்களின் பிள்ளைகள் சேர்ந்து செய்துள்ளனர். அவர்களை காப்பாற்றும் வகையில் மாநில அரசு ஈடுபட்டிருப்பது  கண்டனத்திற்குரியது. உள்ளாட்சி தேர்தல் வந்தால் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கம்பீரமாக சந்திக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்