Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கோயம்பேடு மார்க்கெட்டில் வெங்காயம் விலை திடீர் உயர்வு

நவம்பர் 04, 2019 05:17

போரூர்: கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டிற்கு ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து வெங்காயம் விற்பனைக்கு வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் முதல் வாரம் வரை ரூ.25-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த வெங்காயத்தின் விலை திடீரென ரூ.60-க்கு அதிகரித்தது. பின்னர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு கிலோ ரூ.40-க்கு விலை குறைந்தது. 

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக வெங்காயத்தின் விலை மீண்டும் அதிகரித்து உள்ளது. இன்று காலை பெரிய வெங்காயம் கிலோ ரூ.65-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதே போல் ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த சின்ன வெங்காயம் விலையும் அதிகரித்து ரூ.80 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

வெங்காயம் விலை உயர்வு குறித்து மொத்த வியாபாரி ஜி.எஸ். நடராஜன் கூறியதாவது:- கோயம்பேடு சந்தைக்கு இன்று 60 லாரிகளில் வெங்காயம் விற்பனைக்கு வந்துள்ளது. வழக்கமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து தினமும் 15 லாரிகளில் வந்த வெங்காயம்,  தற்போது அங்கு பெய்து வரும் கனமழை காரணமாக கடந்த 2 நாட்களாக 5 லாரிகளில் மட்டுமே வருகிறது. 

மேலும் மழையால் விளைச்சல் ஆன வெங்காயம் பெரும்பகுதி அழுகி சேதமடைந்து உள்ளது. மத்திய பிரதேசத்தில் இருந்து வரும் வெங்காயமும் மழையால் சேதமடைந்து உள்ளன.  

பொதுவாக ஓட்டல்கள் மற்றும் திருமண நிகழ்ச்சிகளுக்கும், பிரியாணி மற்றும் அசைவ உணவு சமைக்கவும் பெரும்பாலும் நாசிக் வெங்காயத்தை மட்டுமே அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். நாசிக் வெங்காயம் வரத்து குறைந்து உள்ளதன் காரணமாக வெங்காயம் தேவை அதிகரித்து விலை உயர்ந்து உள்ளது. இனி வரும் நாட்களில் வெங்காயத்தின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்