Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

2019-20-ம் நிதியாண்டில் ரூ.2,000 அச்சடிக்கப்படவில்லை: ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வ தகவல்

அக்டோபர் 14, 2019 04:27

டெல்லி: 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் அச்சிடப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ம் தேதி அன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, தவறுகளை களைய வேண்டிய  கட்டாயம் அரசுக்கு உள்ளதாகவும், கறுப்பு பணத்தை ஒழிக்க தனது அரசு இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார். 

உயர் மதிப்பு கொண்ட 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அதிரடியாக  அறிவித்தார். மேலும், கையிருப்பில் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் வைத்திருப்பவர்கள் அதனை டிசம்பர் 30-ஆம் தேதிக்குள் வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்று தெரிவித்தார். 

அடுத்த சில தினங்களில் 2 ஆயிரம் ரூபாய் தாள்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டது கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. அண்மைக் காலமாக 2 ஆயிரம் ரூபாய் ஏடிஎம்களில் சரிவர கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. 

மேலும், ரூ.2,000 நோட்டுகள் அச்சடிப்பது நிறுத்தப்பட்டதாக தகவல் சமூக வலைதளங்களில் பரவி வந்த நிலையில், இது தொடர்பாக தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்ட கேள்விக்கு  ரிசர்வ் வங்கி பதிலளித்துள்ளது. 

அதில், உயர்  மதிப்புக் கொண்ட பணம் மதிப்பிழப்பு செய்யப்பட்ட பின்னர் கடந்த 2016 - 17 மற்றும் 2017 -18ம் நிதியாண்டுகளில் 2 ஆயிரம் ரூபாய் அச்சிடப்பட்டதாகவும், ஆனால் 2019 - 2020ம் நிதியாண்டில் ஒரு நோட்டு கூட அச்சிடப்படவில்லை என்றும்  தெரிவித்துள்ளது.

தலைப்புச்செய்திகள்