Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மாணவிகளை கிண்டல் செய்ததை கண்டித்ததால் ஆசிரியரை தாக்கிய மாணவர்கள்

அக்டோபர் 12, 2019 02:48

அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் 1,500 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு வேதியியல் ஆசிரியராக பணிபுரியும் ஆரோக்கிய நாதன் வகுப்பறையில் பாடம் நடத்தி கொண்டிருந்தார். அப்போது பொது எந்திரவியல் படிக்கும் மாணவர்களில் சிலர் , வெளியில் உள்ள சிமெண்ட் கட்டையில் அமர்ந்து வகுப்பறையில் உள்ள மாணவிகளை கிண்டல் செய்துள்ளனர். அந்த மாணவர்களை ஆரோக்கிய நாதன் கண்டித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று ஆசிரியர் ஆரோக்கியநாதன் வகுப்பறையில் பாடம் நடத்திக்கொண்டிருந்தார். அப்போது வகுப்பறைக்குள் புகுந்த பொது எந்திரவியல் துறை மாணவன் அஜித் குமார் உள்ளிட்ட சிலர் ஆசிரியர் ஆரோக்கியநாதனை தரக் குறைவாக பேசியதுடன், ஆசிரியர் என்றும் பாராமல் வகுப்பறைக்குள் வைத்து தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்தநிலையில் ஆசிரியரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, மாணவ, மாணவிகள் பள்ளிக்கு எதிரே உள்ள திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுப்பட்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்த தகவல் அறிந்ததும் ஜெயங்கொண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். பிறகு மறியலை கைவிட்ட மாணவர்கள் தொடர்ந்து பள்ளி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சம்பவ இடத்திற்கு சென்ற உடையார்பாளையம் கல்வி மாவட்ட அலுவலர் ஹரி செல்வராஜ், மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் வகுப்பறைக்குள் புகுந்து ஆசிரியரை தாக்கிய மாணவர்கள் அஜித்குமார், அபிமன்யு, பூபாலன், சக்திவேல், சூரியமூர்த்தி, ஜீவா ஆகிய 6 மாணவர்களையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். 14ந்தேதி மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் ஆலோசனை செய்து மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கலைந்து சென்றனர்.

தலைப்புச்செய்திகள்