Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கர்நாடகம்: எதிர்க்கட்சித் தலைவராக சித்தராமையா நியமனம்

அக்டோபர் 10, 2019 05:53

புதுடெல்லி: கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அரசு கவிழ்ந்தது. இதையடுத்து எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா ஆட்சி அமைந்தது. இந்த அரசு அமைந்து சுமார் 3 மாதங்கள் ஆகின்றன. ஆனால் எதிர்க்கட்சி தலைவர் நியமனம் செய்யப்படவில்லை. தற்போது கர்நாடக சட்டசபையில் பிரதான எதிர்க்கட்சியாக காங்கிரஸ் உள்ளது.

அக்கட்சியின் சார்பில் எதிர்க்கட்சி தலைவர் இதுவரை நியமனம் செய்யப்படாமல் இருந்தார். இந்நிலையில் கர்நாடக சட்டசபையின் எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கர்நாடக சட்டசபையின் எதிர்க்கட்சித் தலைவராக காங்கிரஸ் தலைவர் சித்தராமையாவும், சட்டமேலவையின் எதிர்க்கட்சித் தலைவராக எஸ்.ஆர்.பாட்டீலும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருகிறது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் "காங்கிரஸ் செயற்குழு உறுப்பினராக சித்தராமையா அளித்த பங்களிப்பை கட்சி பாராட்டுகிறது" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

எதிர்க்கட்சித் தலைவராக நியமனம் செய்யப்பட்டதற்கு நன்றி தெரிவித்து சித்தராமையா வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி என்னிடம் "நம்பிக்கை" காட்டியதற்கும், என்னை மாநில சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவராக நியமித்ததற்கும் நன்றி. கர்நாடக ப.ஜனதா அரசின் தோல்விகளை அம்பலப்படுத்தும் விதமாக, அனைத்து கர்நாடக காங்கிரஸ் தலைவர்களும் செயல்படுவார்கள்” என்று தெரிவித்துள்ளார். 

தலைப்புச்செய்திகள்