Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சந்திரயான்-2 எடுத்த புகைப்படங்கள் வெளியீடு

அக்டோபர் 05, 2019 05:21

பெங்களூரு: சந்திரயான் -2 விண்கலத்தில் உள்ள உயர் திறன் கொண்ட கேமராவால் எடுக்கப்பட்ட நிலவின் மிக நெருக்கமான புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக, இந்திய விண்வெளி ஆய்வு மையமான, 'இஸ்ரோ' சார்பில், ஜூலை, 22ல், சந்திரயான் - 2 விண்கலம், விண்ணில் ஏவப்பட்டது. படிப்படியாக, இதன் சுற்று வட்டப்பாதை அதிகரிக்கப்பட்டு, நிலவை நெருங்கியது. சந்திரயான் - 2 விண்கலத்தில் இருந்து பிரிந்து, நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்யும், 'விக்ரம்லேண்டர்' கருவி, செப்.7ல், நிலவை நெருங்கியது. 

தரையிறங்குவதற்கு சில நிமிடங்கள் இருக்கும்போது, லேண்டர் கருவியுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இந்நிலையில், சந்திரயான் - 2 விண்கலத்தின் ஆர்பிட்டர் கருவி, தொடர்ந்து நிலவை சுற்றி வருகிறது. ஆர்பிட்டரில் உள்ள உயர் தெளிவுதிறன் கொண்ட கேமரா நிலவின் தென் துருவத்தில் எடுத்த மிக நெருக்கமான புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

100 கி.மீ.,உயரத்தில் இருந்து எடுக்கப்பட்ட படங்களில் 14 கி.மீ., நீளமும், 3 கி.மீ., விட்டமும் கொண்ட போகஸ்லாவ்ஸ்கி பள்ளத்தின் ஒரு பகுதி பதிவாகியுள்ளது . இந்த பள்ளம் நிலவின் தென் பகுதியில் உள்ளது. இந்த படம் கடந்த மாதம் (05.09.19) காலை, இந்திய நேரப்படி காலை 4.38 மணியளவில் எடுக்கப்பட்டது. 

மேலும் 5 மீ., மட்டுமே விட்டம் கொண்ட சிறிய பள்ளங்கள், 1 முதல் 2 மீ., உயரம உடைய பாறைகளுடன் கூடிய நிலவின் புகைப்படங்கள் தெளிவாக எடுக்கப்பட்டது. 100 கி.மீ., உயர சுற்றுப்பாதையில் இருந்து மிக தெளிவான புகைப்படங்களை எடுத்து அனுப்பியுள்ள உயர் தெளிவு திறன் கொண்ட கேமரா, நிலவின் ஆய்வில் முக்கியமான கருவி எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

தலைப்புச்செய்திகள்