Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நீட் தேர்வு முறைகேடு: மாணவர் இர்பான் தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரியில் இருந்து நீக்கம்

அக்டோபர் 02, 2019 06:39

தர்மபுரி: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவ கல்லூரியில் மாணவனாக சேர்ந்த புகார் வெளிவந்ததை அடுத்து உதித்சூர்யா மற்றும் அவரது தந்தை மருத்துவர் வெங்கடேசன் ஆகியோரின் ஒரு வார தலைமறைவுக்கு பின்னர் சிபிசிஐடி தனிப்படை போலீசார் அவர்களை கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு தகவல்கள் கிடைத்தன. அதன் அடிப்படையில் பல இடங்களில் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் மேலும் 3 பேரை நீட் ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்த முகமது இர்பான் என்ற மாணவரை மருத்துவம் படிக்க வைக்க நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்ததாக கூறி அவரது தந்தை டாக்டர் முஹம்மத் ‌ஷபியை சிபிசிஐடி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவர் இர்பான் சேலம் நடுவர் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி சிவா முன்னிலையில் சரண் அடைந்தார்.அவரை வருகிற 9-ந் தேதிவரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து இர்பான் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர். விரைவில் சேலம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்து அவரை காவலில் எடுத்து தேனி சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்துவார்கள்.

இந்த நிலையில் மாணவர் முகமது இர்பான் தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மருத்துவ கல்வி இயக்குனரகம் அறிவுரையின் பேரில் இந்த நடவடிக்கையை தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி டீன் சீனிவாசராஜூ எடுத்துள்ளார். அவர் நீக்கப்பட்டதை தொடர்ந்து தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரியில் ஒரு மாணவர் இடம் காலியாக உள்ளது.

தலைப்புச்செய்திகள்