Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்திய கோடீசுவரர்களில் முகேஷ் அம்பானி முதலிடம்

செப்டம்பர் 26, 2019 10:43

புதுடெல்லி: இந்தியாவில் கோடீசுவரர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்தபடியே உள்ளது.
கடந்த ஆண்டு ரூ.1000 கோடிக்கு மேல் சொத்து வைத்திருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை 831 ஆக இருந்தது. இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 953 பேராக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் இந்திய கோடீசுவரர்களில் யார்-யார் முதன்மை இடங்களில் உள்ளனர் என்ற ஆய்வு பட்டியலை தனியார் நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் இந்திய கோடீசுவரர்களில் பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானி தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறார்.

முகேஷ்அம்பானியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.3 லட்சத்து 80 ஆயிரத்து 700 கோடியாகும். ரிலையன்ஸ் தொழில் நிறுவனங்களை நடத்தி வரும் இவரது சொத்து மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

கோடீசுவரர்களில் 2-வது இடத்தில் இந்துஜா குடும்பத்தினர் உள்ளனர். அவர்களது சொத்து மதிப்பு ரூ.1 லட்சத்து 86 ஆயிரத்து 500 கோடியாகும். முதலிடத்தில் இருக்கும் முகேஷ் அம்பானியை விட 2-வது இடத்தில் இருக்கும் இந்துஜா குடும்பத்தினர் சுமார் ரூ.2 லட்சம் கோடி அளவுக்கு பின்தங்கி இருக்கிறார்கள்.

3-வது இடத்தில் இருக்கும் அஜிம்பிரேம்ஜி ரூ.1 லட்சத்து 17 ஆயிரத்து 100 கோடி சொத்து மதிப்புடன் இருக்கிறார். லட்சுமிமிட்டல் ரூ.1 லட்சத்து 7 ஆயிரத்து 300 கோடியுடன் 4-வது இடத்தில் இருக்கிறார். கவுதம்அதானி ரூ. 94 ஆயிரத்து 500 கோடியுடன் 5-வது இடத்தில் இருக்கிறார்.

தொழில் அதிபர் உதய் கோடக் ரூ.94 ஆயிரத்து 100 கோடியுடன் 6-வது இடத்திலும், சைரஸ் பூன்வாலா ரூ.88 ஆயிரத்து 800 கோடியுடன் 7-வது இடத்திலும், பலோன்ஜி மிஸ்ட்ரி ரூ.76 ஆயிரத்து 800 கோடியுடன் 8-வது இடத்தில் உள்ளனர்.

சபூர்மிஸ்ட்ரி ரூ. 76 ஆயிரத்து 800 கோடியுடன் 9-வது இடத்திலும், திலீப்சங்கவி ரூ.71 ஆயிரத்து 500 கோடியுடன் 10-வது இடத்திலும் உள்ளனர்.

இந்தியாவில் உள்ள முதல் 25 பணக்காரர்களின் நிறுவனங்கள் செய்யும் உற்பத்தி இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதமாகும்.

தலைப்புச்செய்திகள்