Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சுபஸ்ரீ விவகாரம்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

செப்டம்பர் 23, 2019 09:12

சென்னை: பேனர் விழுந்து இளம்பெண் பலியான விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து தமிழக அரசு பதலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, பள்ளிக்கரணை அருகே, கடந்த செப்., 12ம் தேதி பேனர் சரிந்து விழுந்ததில், அவ்வழியே, இருசக்கர வாகனத்தில் சென்ற, குரோம்பேட்டையை சேர்ந்த, தனியார் நிறுவன மென்பொறியாளர், சுபஸ்ரீ, 23, தடுமாறி கீழே விழுந்தார். பின்னால் வந்த குடிநீர் லாரி மோதி இறந்தார்.

இது தொடர்பாக லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர். பேனர் அச்சடித்த அச்சகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. பேனர் வைத்த அதிமுக கவுன்சிலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பாக செப்., 13ல் நடந்த விசாரணையில் அதிகாரிகளின் அலட்சியத்தை மேற்கோள் காட்டிய சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் தமிழக அரசு மீது சரமாரியான கேள்விகளை எழுப்பினர்.

நீதிபதிகள் கூறியதாவது: பேனர் விவகாரம் தொடர்பான வழக்கை நீதிமன்றம் தொடர்ந்து கண்காணிக்கும். அனுமதி அளித்த அதிகாரிகளின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், பணியில் கவனக்குறைவாக இருந்தது குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் மாநகராட்சி கமிஷனருக்கு உத்தரவிடுகிறேன். கமிஷனர் எடுக்கும் நடவடிக்கை குறித்து தலைமைச் செயலர் கண்காணித்து அறிக்கை தர வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இன்று (செப்., 23) இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரமேஷ், சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்காதது ஏன்? நடவடிக்கை எடுக்காதது குறித்து நாளை மறுநாளைக்குள் (செப்., 25) தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதி ரமேஷ் உத்தரவிட்டார்.

தலைப்புச்செய்திகள்