Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கவர்னர் திமுக போராட்டத்தை கைவிடும்படி வற்புறுத்தவில்லை: டி.ஆர். பாலு

செப்டம்பர் 20, 2019 05:49

சென்னை: மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இந்தி மொழியால்தான் நாட்டை ஒருங்கிணைக்க முடியும் என்று கூறி இருந்தார். இது, இந்தியை மற்ற மொழிகள் பேசும் மக்கள் மீது திணிக்கும் செயல் என்று குற்றம் சாட்டப்பட்டது.

இது சம்பந்தமாக டி.ஆர். பாலு கூறியதாவது:- பொதுவாக இதுபோன்ற அவதூறான தரம் தாழ்ந்த செய்திகளை நாங்கள் கவனத்தில் எடுத்துக்கொள்வதில்லை. இது ஒரு அபத்தமான தகவல். கவர்னர் எங்களை சந்திக்க வரும்படி அழைத்தார். அந்த சந்திப்பின்போது போராட்டத்தை விலக்கிக் கொள்ளுங்கள் என்று அவர் எங்களிடம் ஒருபோதும் வற்புறுத்தவில்லை.

அவர் எங்களிடம் கூறும் போது, அமித்ஷாவின் பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டு உள்ளது. இந்தியை திணிப்பது மத்திய அரசின் நோக்கம் அல்ல என்று கூறினார். மேலும் மத்திய செய்தி தகவல்துறை இது சம்பந்தமாக தயாரித்து இருந்த தகவல் அறிக்கை ஒன்றையும் எங்களிடம் காண்பித்தார்.

அமித்ஷாவின் உண்மையான பேச்சு எவ்வாறு இருந்தது? அதில் தவறான நோக்கம் எதுவும் இல்லை என்று கூறப்பட்டு இருந்தது. இதை காட்டி பேசிய கவர்னர், தி.மு.க. தலைவர்கள் இந்த பிரச்சனையை பெரிதுபடுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். தி.மு.க. சார்பில் இது சம்பந்தமாக போராட்டம் நடத்துவதில் மு.க. ஸ்டாலின் உறுதியாக இருந்தார். ஆனாலும், கவர்னர் எங்களிடம் எந்த அழுத்தத்தையும் கொடுக்கவில்லை. எங்கள் முடிவுக்கே விட்டு விட்டார்.

நாங்கள் கவர்னர் மாளிகையில் இருந்த போது, எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. மத்திய அரசிடம் இருந்து ஒரு உறுதி தரவேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கேட்டார். அதற்கு கவர்னர், நானும் மத்திய அரசின் பிரதிநிதி தான் என்று கூறினார். அதன் பிறகு நாங்கள் அறிவாலயத்துக்கு வந்தோம். அமித்ஷாவின் உத்தரவு இல்லாமல் கவர்னர் எங்களை அணுகி இருக்க மாட்டார் என நாங்கள் கருதினோம்.

கவர்னர், மு.க.ஸ்டாலினை சந்திப்பதற்கு அழைத்து இருக்கிறார் என்றால் தி.மு.க.வுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளிக்கிறது என்பதை காட்டியது.

ஆனாலும், கவர்னரின் உத்தரவாதத்தின் அடிப்படையில் மட்டுமே ஒரு முடிவை எடுக்க விரும்பவில்லை. ஏனென்றால் கட்சிக்காரர்கள் போராட்டத்துக்கான ஏற்பாடுகளை விரிவாக செய்து இருந்தனர். இந்த நேரத்தில் அமித்ஷா இது சம்பந்தமாக ஒரு விளக்கத்தை வெளியிட்டார். அதன் பிறகுதான் போராட்டத்தை வாபஸ் பெறுவது என்று முடிவு செய்தோம்.

1965-ல் தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டங்களை போல் மீண்டும் நடப்பதை மத்திய அரசு தவிர்க்க விரும்பியதாக கருதுகிறேன். மேலும் அக்டோபர் மாதம் மகாபலிபுரத்தில் பிரதமர்- சீன அதிபர் சந்திப்பு நடக்க உள்ள நிலையில் இதுபோன்ற அமைதியற்ற சூழ்நிலை ஏற்படுவதை மத்திய அரசு விரும்பவில்லை என்றும் கருதுகிறேன் என டி.ஆர். பாலு கூறினார்.

தலைப்புச்செய்திகள்