Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கழிவுநீர்த் தொட்டி விஷவாயுவில் மனிதர்கள் இறப்பது உலகில் வேறெங்கும் இல்லை: உச்ச நீதிமன்றம் வேதனை

செப்டம்பர் 18, 2019 03:20

புதுடெல்லி: கழிவுநீர்த் தொட்டிக்கு ஒரு மனிதரை அனுப்பி விஷவாயுவில் இறக்கச் செய்வது உலகில் வேறு எங்கும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் மத்திய அரசைக் கடுமையாகக் கண்டித்தது.

எஸ்சி,எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் குற்றம் சாட்டப்படும் நபர்களை முதல்கட்ட விசாரணை எதுவுமின்றி உடனடியாக கைது செய்வதற்குத் தடை விதித்தும், குற்றம் சாட்டப்பட்டோர் முன் ஜாமீன் பெறுவதற்குரிய அம்சங்களை அறிமுகப்படுத்தியும் உச்ச நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் 20-ம் தேதி தீர்ப்பளித்தது.

இதைத் தொடர்ந்து, தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. எனினும், தங்களது தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் விரிவான பதிலைத் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கும், மற்ற மனுதாரர்களுக்கும் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கில் கடந்த 13-ம் தேதி தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, யு.யு.லலித் இந்தவழக்கை 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றி தீர்ப்பளித்தனர். இந்நிலையில் இந்த வழக்கு மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் இன்று விசாரிக்கப்பட்டது. அந்த அமர்வில் நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எம்.ஆர்.ஷா, பிஆர் கவி ஆகியோர் இடம் பெற்றனர்.

மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்ய்பட்ட சீராய்வு மனுவுக்கு வாதிட அட்டர்னலி ஜெனரல் கே.கே.வேணுகோபால் ஆஜராகி இருந்தார்.

அப்போது அட்டர்னி ஜெனரலிடம் நீதிபதி அருண் மிஸ்ரா கடுமையான கேள்விகளை எழுப்பினார். நீதிபதி மிஸ்ரா தலைமையிலான அமர்வு கூறுகையில், " நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் சாதிப் பாகுபாடு தொடர்கிறது. இன்னும் கழிவுநீர்த் தொட்டி சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளுக்குத் தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட சாதியினரை மட்டுமே சமூகம் பயன்படுத்துகிறது

மனிதர்களில் அனைவரும் சமமானவர்கள்தான். ஆனால், அவர்கள் அனைவருக்கும் சமமான உரிமை, வசதிகள் அளிக்கப்படுகிறதா? கழிவுநீர்த் தொட்டிக்குள் இறங்கும் தொழிலாளர்களுக்கு முறையாக பாதுகாப்புக் கவசமான முகமூடி, ஆக்ஸிஜன் சிலிண்டர் ஏன் வழங்கப்படுவதில்லை? கழிவுநீர்த் தொட்டிக்குள் மனிதர்களை அனுப்பி விஷவாயுவில் இறக்கச் செய்யும் அவலம் உலகில் எந்த நாட்டிலும் இல்லை. ஒவ்வொரு மாதமும் 4 முதல் 5 பேர் கழிவுநீர்த் தொட்டியில் சிக்கி இறக்கிறார்கள்.

கழிவுநீர்த் தொட்டிக்குள் இறங்கி சுத்தம் செய்யும் மனிதருக்குப் போதுமான பாதுகாப்புக் கவசங்கள் இல்லாமல் பணியைச் செய்ய வற்புறுத்துவது மனிதத் தன்மையற்றது. இதன் மூலம் நாட்டில் தீண்டாமை மறைமுகமாக இருக்கிறது என்று நம்புகிறோம்.

இந்திய அரசியலைப்பு தீண்டாமையை ஒழித்துவிட்டது. நான் உங்களிடம் கேட்கிறேன். கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்யும் தொழிலாளியுடன் கைகுலுக்குவீர்களா? அதற்கு இல்லை என்றுதானே பதில். இந்த வழியில்தான் நாம் சென்று கொண்டிருக்கிறோம். இந்த சூழல் மாறி உயர வேண்டும். சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளைக் கடந்த பின்பும் இன்னும் இதுபோன்ற கொடுமை நடந்து வருகிறது" என நீதிபதிகள் தெரிவித்தனர்.

தலைப்புச்செய்திகள்