Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

4 தமிழக எம்.பி.க்கள் வெற்றிக்கு எதிரான வழக்கில் தேர்தல் கமிஷன் பதிலளிக்க ஐகோர்ட்டு

செப்டம்பர் 18, 2019 04:25

சென்னை: சென்னை ஐகோர்ட்டில் தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் எம்.எல்.ரவி ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் கூறப்பட்டிருந்ததாவது: 

மக்களவைத் தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டது. இந்த கூட்டணியில் இடம் பெற்ற கூட்டணி கட்சிகள் சில தி.மு.க.வின் சின்னமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டன. அதாவது ம.தி.மு.க.வை சேர்ந்த கணேசமூர்த்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த ரவிக்குமார், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியைச் சேர்ந்த சின்ராஜ், இந்திய ஜனநாயக கட்சியைச் சேர்ந்த பாரிவேந்தர் ஆகியோர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி.க்களாகி உள்ளனர்.

தேர்தல் நடத்தை விதிகளின்படி ஒரு கட்சியில் உறுப்பினராக உள்ள ஒருவர், அந்த கட்சியில் இருந்து விலகாமல் மற்றொரு அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் சின்னத்தில் போட்டியிட முடியாது. அவ்வாறு போட்டியிடுவது சட்டவிரோதமானது. ஒரு கட்சியில் பொறுப்பு வகித்துக்கொண்டு மற்றொரு கட்சி சின்னத்தில் போட்டியிட சட்டத்தில் இடமில்லை. எனவே தி.மு.க.வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 4 பேரது வெற்றியும் செல்லாது என அறிவிக்க வேண்டும்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “கட்சியின் அடிப்படை உறுப்பினராக இல்லாத ஒருவரை அந்த கட்சியின் சின்னத்தில் போட்டியிட அனுமதி அளித்தது தேர்தல் நடைமுறைகளை மீறிய செயல் ஆகாதா?. 

தேர்தலில் கட்சியின் பெயர், தேர்தல் அறிக்கையைவிட சின்னம் தானே பெரும் பங்காற்றுகிறது. சின்னத்தை பார்த்துத்தானே பொதுமக்கள் வாக்களிக்கின்றனர்?. தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது முக்கியமல்ல. ஆனால் எப்படி போட்டியிடுகிறோம் என்பதுதான் முக்கியம்” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதற்கு பதில் அளித்த இந்திய தேர்தல் ஆணையத்தின் வக்கீல் ஆர்.நிரஞ்சன், “ஒரு கட்சியைச் சேர்ந்தவர் மற்றொரு அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் சின்னத்தில் போட்டியிட முடியாது என தேர்தல் விதிகளில் உள்ளது. ஆனால் அந்த வேட்புமனுவை சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரி எந்த சூழலில் ஏற்றுக்கொண்டார் என்பதையும் உற்றுநோக்க வேண்டும். 

வேட்பு மனுவை ஏற்பதா? அல்லது நிராகரிப்பதா? என்பது தேர்தல் அதிகாரியின் முடிவு. ஒருவேளை அவர் ஏற்றுக்கொண்டது தவறு என்பதை ஆதாரபூர்வமாக நிரூபித்தால், அதை எதிர்த்து தேர்தல் வழக்குதான் தொடர முடியும். பொதுநல வழக்காக தொடர முடியாது. எனவே, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்பதால் தள்ளுபடி செய்ய வேண்டும்” என வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதிகள், “தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டும் பல்வேறு தீர்ப்புகளை பிறப்பித்துள்ளது. எனவே இதுகுறித்து தேர்தல் ஆணையம் மற்றும் தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், வெற்றி பெற்ற மற்றும் போட்டியிட்ட கூட்டணி கட்சியினரும் வருகிற நவம்பர் 12-ந் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும்” என உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்