Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காஷ்மீரில் நிலம் வாங்க அனுமதி கோரி கடிதம்: மதுரை வழக்கறிஞருக்கு பிரதமர், உள்துறை அமைச்சர் பதில்

செப்டம்பர் 16, 2019 02:35

மதுரை: காஷ்மீர் மாநிலத்தில் நிலம் வாங்க அனுமதி கேட்டு கடிதம் எழுதிய மதுரை வழக்கறிஞருக்கு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் பதிலளித்துள்ளனர்.

ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு சமீபத்தில் ரத்து செய்தது. இதையொட்டி மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார், ஜம்மு காஷ்மீரில் இடம் வாங்குவது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் ஒன்று எழுதினார்.

இந்நிலையில், இவரது கடிதத்திற்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா என இருவருமே பதில் கடிதம் அனுப்பி உள்ளனர்.

பிரதமர் அனுப்பிய பதில் கடிதத்தில், "வரலாற்று சிறப்புமிக்க இந்த சட்டம் நிறைவேற்றப்பட்ட தருணத்தில் நீங்கள் இக்கடிதத்தை அனுப்பியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. நாடாளுமன்றத்தில் இந்த சட்ட மசோதாவுக்கு ஏகோபித்த ஆதரவு கிடைத்தது. அந்த ஆதரவு நாடு முழுவதும் உள்ள மக்களின் எண்ணங்களின் பிரதிபலிப்பு.

இனி, உங்களைப் போன்ற நண்பர்களும் நானும் இணைந்து தேசத்தின் ஒருமைப்பாட்டை முழுவீச்சில் நிலைநிறுத்த வேண்டும். வெறும் காகிதங்களில் எழுதிய வார்த்தைகளாக இது நின்றுவிடாமல் நம் மனங்களும் இதயங்களும் ஒன்றுபட வேண்டும்.

இந்த சட்டத்தின் தொலைதூர பார்வையே அனைவருக்குமான வளர்ச்சி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதை உறுதி செய்வதே" என்று கூறியுள்ளார்.

உள்துறை அமைச்சர் அமித்ஷா அனுப்பிய பதில் கடிதத்தில், "இந்த மசோதாவை புரிந்து கொண்டு கடிதம் எழுதிய சகோதருக்கு நன்றி. நாட்டின் வளர்ச்சிக்கு அனைவரும் இணைந்து செயல்படுவோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

அமித் ஷா இந்தியிலும் பிரதமர் மோடி ஆங்கிலத்திலும் பதில் கடிதத்தை அனுப்பியுள்ளனர்.
 

தலைப்புச்செய்திகள்