Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்தை ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. முற்றுகை

செப்டம்பர் 16, 2019 01:25

புதுச்சேரி: புதுச்சேரியின் ஊசுடு தொகுதிக்கு உட்பட்ட ராமநாதபுரம் கிராமத்தில் ஜிப்மர் மருத்துவமனையின் கிளை இயங்கி வருகிறது. சுற்றுப்பகுதியில் உள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த புறநோயாளிகள் இங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனைக்கு வரும் சாலைகள் அனைத்தும் கடந்த 5 ஆண்டுகளாக மிக மோசமான நிலையில் உள்ளது. இதனால் நோயாளிகளும் பொதுமக்களும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்களும் சட்டமன்ற உறுப்பினரும் அரசுக்கு பலமுறை கோரிக்கை வைத்தும் செவி சாய்க்கவில்லை. கடந்த வாரம் நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்திலும் இதுதொடர்பாக அரசின் கவனத்தை சட்டமன்ற உறுப்பினர் தீப்பாய்ந்தான் எழுப்பினார்.  

ஆனால் இதுவரை அதிகாரிகள் யாரும் வந்து சம்பவ இடத்தை ஆய்வு செய்யவில்லை. இதனை கண்டிக்கும் விதமாக புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்தை சட்டமன்ற உறுப்பினர் தீப்பாய்ந்தான் தலைமையில் கிராம மக்கள் திடீர் முற்றுகையில் ஈடுபட்டனர். 

இதனையடுத்து தலைமை பொறியாளர் மகாலிங்கம்,சட்டமன்ற உறுப்பினர் மற்றும் கிராம மக்களை உள்ளே அழைத்து சமாதானப்படுத்தினார்.சாலைகளை சீரமைக்க ஓரிரு நாளில் ஒப்பந்தம் கோரப்படும் என உறுதியளித்தார். ஆனால் இதனை கிராம மக்கள் ஏற்க மறுத்தனர்.

30 ஆண்டுகளாய் அடிப்படை செய்யாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுங்கள்,அதிகாரிகள் களத்திற்கு வந்தால்தான் கலைந்து செல்வோம் என மக்கள் கூறி  பொதுப்பணித்துறை அலுவலகத்திற்குள் அமர்ந்துவிட்டனர்.இதனால் ஒரு மணி நேரமாக பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பரபரப்பு காணப்பட்டது.  

இதனிடையே பாதிக்கப்பட்டுள்ள கிராம சாலைகளை உடனே ஆய்வு செய்வதாக தலைமை பொறியாளர் மகாலிங்கம் உறுதியளித்து சக அதிகாரிகளுடன் உடனே புறப்பட்டார். இதனையடுத்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

தலைப்புச்செய்திகள்