Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு 100 சதவிகித வரிவிலக்கு - புதிய கொள்கையை வெளியிட்டார் முதல்வர்

செப்டம்பர் 16, 2019 12:05

சென்னை: சுற்றுப்புறச் சூழல்களை பாதுகாத்து, காற்று மாசுபடுவதை குறைக்கின்ற வகையில், மின்சாரத்தில் இயங்கிடும் வாகனங்களை தமிழ்நாட்டில் உற்பத்தி செய்வதற்கு ஏதுவாக தமிழ்நாடு அரசினால் “தமிழ்நாடு மின்சார வாகனக் கொள்கை 2019” தயாரிக்கப்பட்டுள்ளது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில் “தமிழ்நாடு மின்சார வாகனக் கொள்கை 2019”ஐ வெளியிட்டார். அதனை அமைச்சர்கள் எம்.சி. சம்பத், எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

தமிழ்நாடு மின்சார வாகனக் கொள்கை 2019-ன் படி, அனைத்து மின்சார இருசக்கர வாகனங்கள், சீருந்துகள், மூன்று சக்கர வாகனங்கள், பேருந்துகள் மற்றும் இலகு ரக சரக்கு வாகனங்கள் ஆகியவற்றிற்கு 100 சதவிகித மோட்டார் வாகன வரி விலக்கு வழங்கப்படும். இந்த வரி விலக்கு, 2022-ம் ஆண்டு இறுதி வரை வழங்கப்படும்.

மின்சார வாகனங்கள், அதன் உதிரி பாகங்கள் மற்றும் மின்கலன் அதற்கான மின்ஏற்று உபகரணங்களை உற்பத்தி செய்வோருக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படும். ரூபாய் 50 கோடிக்கு மேல் முதலீடு செய்தும், குறைந்தபட்சம் 50 நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்கள் பின்வரும் சலுகைகள் பெற தகுதி பெறும்.

தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் மின்சார வாகனங்களுக்கான மாநில சரக்கு மற்றும் சேவை வரி 100 சதவிகிதம் திரும்ப வழங்கப்படும். இந்த சலுகை 2030-ம் ஆண்டு வரை வழங்கப்படும்.

மின்சார வாகனங்கள் உற்பத்திக்கான முதலீடுகளுக்கு 15 சதவிகிதம் வரையும், மின்கலன் (பேட்டரி) உற்பத்திக்கான முதலீடுகளுக்கு 20 சதவிகிதம் வரையும் மூலதன மானியம் வழங்கப்படும். இந்த சலுகை, 2025ஆம் ஆண்டு வரை செய்யப்படும் முதலீடுகளுக்கு பொருந்தும்

தலைப்புச்செய்திகள்