Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வைகோ தான் எங்கள் போர்வாள்: மதிமுகவை புகழ்ந்து தள்ளிய ஸ்டாலின்

செப்டம்பர் 15, 2019 06:53

சென்னை: மதிமுக, திமுக இடையிலான உறவு மிகவும் நெருக்கமாகி உள்ளது சந்தோசம் அளிக்கிறது என்று திமுக தலைவர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். திமுகவின் மறைந்த தலைவர் அறிஞர் அண்ணாவின் 111வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையடுத்து மதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா மாநாடு சென்னையில் நடைபெற்றது.

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் விழா நடந்தது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுக தலைவர் ஸ்டாலின் விழாவில் கலந்து கொண்டனர். சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் மதிமுக மாநாட்டில் பேசிய மு.க.ஸ்டாலின் மதிமுகவுடன் திமுகவிற்கு உள்ள உறவு குறித்து பேசினார். அதில், நானும் அண்ணன் வைகோவும் பல மேடைகளில் ஒன்றாக இருந்திருக்கிறோம். தேர்தல் கூட்டம், திமுக கூட்டங்களில் கலந்து கொண்டு இருக்கிறோம்.

ஆனால் இந்த மாநாடு என் மனதிற்கு நெருக்கமானது. இந்த மாநாடு சிறப்பானது. ஏனென்றால் நான் கலந்து கொள்ளும் முதல் மதிமுக கட்சி மாநாடு, இந்த மாநாடு. பொது மேடைகளில் கலந்து கொண்டுள்ளோம். ஆனால் இதுதான் முதல் மதிமுக மாநாடு.

திமுக - மதிமுக உறவு மிகவும் நெருக்கமாகி உள்ளது. நீர் அடித்து நீர் விலகாது என்பது போல் நாம் ஒன்றாகி உள்ளோம். தனித்தனி வீட்டில் இருந்தாலும் நாம் எல்லாம் ஒரே தாயின் மகன்கள். அறிஞர் அண்ணாதான் நம்மை இணைத்து வருகிறார். தமிழர்களை இணைக்கும் சக்தி அண்ணா

பிரிந்திருந்திருக்கும் தமிழர்களை இணைக்கும் சொற்கள் தமிழ், தமிழர், திராவிடம், அண்ணா, கருணாநிதி ஆகியவை ஆகும். திமுகவில் நான் எப்படி நிரந்தர தளபதியோ, அதேபோல் நிரந்தர போர்வாள் வைகோ. திமுகவுக்கு பக்கபலமாக இருக்கிறார் வைகோ, வைகோவிற்கு திமுக சார்பாக நன்றி.

அதனால்தான் மதிமுக மேடையில் ஸ்டாலின் நிற்கிறான். இது பலருக்கு ஆச்சர்யமாக, பொறாமையாக இருக்கலாம். ஆனால் எங்கள் உறவு இப்படித்தான். இதுதான் கருணாநிதி, அண்ணா அவர்களின் கனவு. திமுகவிற்கு பக்க துணையாக வைகோ இருந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது, என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
 

தலைப்புச்செய்திகள்