Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சிலை மாற்றப்பட்டது தொடர்பான வழக்கில் அறநிலைய துறை கூடுதல் ஆணையர் திருமகளின் ஜாமீன் ரத்து

செப்டம்பர் 10, 2019 08:34

தஞ்சாவூர்: சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் கடந்த 2004ம் ஆண்டு கோயில் கும்பாபிஷேகத்துக்காக திருப்பணி நடந்தபோது புன்னை வனநாதர் சன்னதியில் சிவனுக்கு பூஜை செய்வது போல மயில் கல் சிலை இருந்தது. இந்த சிலை மாற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.

இந்த மயில் சிலையை சிலர் திருடி விற்றதாக ரங்கராஜ நரசிம்மன் என்பவர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அப்போது இக்கோயில் செயல் அலுவலராக பணியாற்றிய திருமகள் இப்போது அறநிலைய துறை ஆணையர் அலவலகத்தில் கூடுதல் ஆணையராக இருந்தார். 

மயில் சிலை மாயமான வழக்கில் கடந்த 16.12.2018 ஆம் தேதி திருமகளை போலீசார் சென்னையில் கைது செய்து கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து திருமகளை அறநிலைய துறை சஸ்பெண்ட் செய்தது. பின்னர் நீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமீன் பெற்று திருமகள் வெளியே வந்தார்.

இந்நிலையில் இவரது ஜாமீனை ரத்து செய்ய வேண்டுமென சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கும்பகோணம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இம்மனு தொடர்பாக நீதிபதி மாதவராமானுஜன் முன்னிலையில் கடந்த 3 மற்றும்  7 ஆம் தேதிகளில் இருதரப்பு விவாதம் நடந்தது.

இந்நிலையில் இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது திருமகளுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்வதாக நீதிபதி தெரிவித்தார். எனவே இவ்வழக்கில் அடுத்தகட்டமாக திருமகளை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 

தலைப்புச்செய்திகள்