Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

குடிநீர் விநியோகம் செய்யப்படாததை கண்டித்து சாலை மறியல்

செப்டம்பர் 10, 2019 07:50

ஆவடி: திருநின்றவூர் பேரூராட்சியில் 18வார்டுகள் உள்ளன. இங்கு சுமார் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தாமரைப்பாக்கம் அருகில்  கொமக்கன்பேடு பகுதியில் இருந்து குழாய் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. கடந்த இரு வாரமாக பேரூராட்சி பகுதியில் பல வார்டுகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. 

இதனால், பொதுமக்கள் குடிநீரின்றி அவதிப்பட்டு வந்தனர். இது குறித்து பொதுமக்கள் பேரூராட்சி அதிகாரிகளை சந்தித்து புகார்களை அளித்து வந்தனர். இருந்த போதிலும் அதிகாரிகள் குடிநீர் விநியோகம் செய்ய போதிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனையடுத்து பொதுமக்கள் குடிநீர் இன்றி தவித்து உள்ளனர். 

இதனால் ஆத்திரமடைந்த ராமதாசபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று மாலை திரண்டு வந்தனர். பின்னர், அவர்கள் திருநின்றவூர்- புதுச்சத்திரம் நெடுஞ்சாலையில் வாகனங்களை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

மேலும், சாலையில் 2கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது தகவலறிந்த திருநின்றவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர், போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை கலைந்து செல்லுமாறு கூறினர். இதற்கு, பொதுமக்கள் எப்போது குடிநீர் வரும் என அதிகாரிகள் உறுதி அளித்தால் மட்டுமே சாலை மறியலை கைவிடுவோம் என திட்டவட்டமாக கூறினார். 

இதனை அடுத்து போலீசார் பேரூராட்சி நிர்வாகத்திற்கு தகவல் அளித்து அதிகாரிகளை அழைத்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு செயல் அலுவலர் விஜயா தலைமையில் அதிகாரிகள் விரைந்து வந்தனர். அவர்கள் போராட்டம் நடத்திய பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

குடிநீர் குழாயில் உடைப்பு இருப்பதால் அதனை சரி செய்யும் நடவடிக்கையில் நிர்வாகம் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும், நாளை உங்கள் பகுதி முழுவதும்  குடிநீர் விநியோகம் செய்யப்படும் என உறுதி அளித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

தலைப்புச்செய்திகள்