Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு டெங்கு பாதிப்பு குறைவாகவே: அமைச்சர் விஜயபாஸ்கர்

செப்டம்பர் 07, 2019 06:58

சென்னை: தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் அரசு ஆஸ்பத்திரிகளில் தினசரி கூட்டம் அலைமோதுகிறது. தனியார் ஆஸ்பத்திரிகளிலும் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சுகாதாரத்துறையினர் இதுவரை எடுத்த கணக்கெடுப்பின்படி 1700 பேர் டெங்கு பாதிப்பால் சிகிச்சை பெற்றது தெரியவந்துள்ளது.

இதனால் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழ்நாடு முழுவதும் சுகாதார பணியாளர்கள் தீவிர முன்எச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் டெங்கு, தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைள் குறித்த ஆய்வு கூட்டத்தை சென்னையில் நேற்று நடத்தினார்கள். இதில் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

அப்போது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தில் வடசென்னை, தர்மபுரி உள்பட சில மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் அறிகுறி சிலருக்கு ஏற்பட்டது. மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதால் அவர்களது உடல்நிலை தேறி உள்ளது. இதனால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை.

தமிழகத்தில் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு டெங்கு பாதிப்பு குறைவாகவே உள்ளது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் வெளிநாடுகளுக்கு சென்றிருந்தபோது லண்டனில் தனியார் சுகாதார நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி கொசு ஒழிப்பில் உள்ள நவீன நடைமுறைகள், தொழில்நுட்பத்தை இங்கு செயல்படுத்த உள்ளோம்.

மழைக்காலம் தொடங்குவதையொட்டி, டெங்கு காய்ச்சல், தொற்றுநோய்களைத் தடுக்கும் வகையில் உள்ளாட்சி, சுகாதாரத்துறை இணைந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இதன்படி பெருநகர சென்னை மாநகராட்சி உள்பட 15 மாநகராட்சிகள், 121 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள், 12,522 ஊராட்சிகளில் உள்ளாட்சி மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்கள் மொத்தம் 1 லட்சத்து 63 ஆயிரம் பேர் டெங்கு, தொற்று நோய்த்தடுப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 9,881 கொசு ஒழிப்பு புகைப்பரப்பும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இப்பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் அனைவரும் காலை 6 மணிக்கு அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களுக்குச் சென்று கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என அறிவிறுத்தப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளால் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவு 0.2 இருப்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதி செய்வதுடன், காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர் குறித்த விவரங்களை சுகாதாரத்துறையினருக்கு உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும்.

சென்னை உள்பட 15 மாநகராட்சிகள், 121 நகராட்சிகளில் கொசுக்கள் உருவாகும் வகையில் கட்டடங்களை பராமரிப்பின்றி வைத்திருந்தவர்களுக்கு இதுவரை ரூ. 16 லட்சத்து 44 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் சுற்றுவட்டார பகுதியை கொசுக்கள் உருவாகாத வகையில் பராமரிப்பதுடன், அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்