Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பழைய கஞ்சியை குடித்து அச்சத்தில் விடுதியில் தங்கி படிக்கும் மாணவன்

செப்டம்பர் 06, 2019 06:25

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுற்றுவட்டார கிராமபுறங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் பயின்றுவருகின்றனர். 

இதில் அதிகதூரமும் பேருந்து வசதி இல்லாமலும் வீட்டிற்கு சென்றுவரமுடியாத மாணவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இதேபோல் இந்தாண்டு 50 மாணவர்கள் இந்த விடுதியில் சேர்ந்துள்ளனர்.  

ஆனால் விடுதியில் சேர்ந்த மாணவர்களுக்கு பெரும் அதிர்ச்சி தந்துள்ளது. விடுதி காப்பாளர் மாணவர்களுக்கு காலை ஒருவேளை மட்டும் சமைத்து அதனை மதியம் இரவு என 3 வேளைக்கும் உணவாக தந்து வருவது வழக்கமாக வைத்துள்ளதால் உடல்நிலை கோளாறு ஏற்பட்ட மாணவர்கள் மீண்டும் விடுதி பக்கம் திரும்பாமலேயே ஓட்டம் பிடித்துள்ளனர். 

தினந்தோறும் பதிவேட்டில் 50 பேர்களின் வருகை பதிவு செய்யப்பட்டு தற்போது மலைகிராமம் கீழுர் கிராமத்திலிருந்து பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் சக்கரவத்தி என்ற மாணவன் மட்டும் தங்கி படித்து வருகிறார்.
 
இவருக்காக காலை ஒரு வேளை கஞ்சி செய்யப்பட்டு இதனை 3 வேளைக்கும் பயன்படுத்திக்கொள்ள தந்துவிட்டு சமையலர் சென்றுவிடுவதாகவும் விடுதி காப்பாளர் விடுதி காவலர் என யாரும் விடுதி பக்கம் வருவதில்லை எனவும் இரவு பகலாக நான் ஒருவனாக பெரும் அச்சத்தில் இருப்பதாகவும் வேறு வழியில்லாமல் காலையில் செய்த கஞ்சியை குடித்து தனிமையில் இருந்துவரும் அவலநிலை இருந்துவருவதாகவும் இதனை கண்காணிக்கவேண்டிய துறைசார்ந்த அதிகாரிகள் யாரும் இதுவரையில் ஆய்விற்காக வந்ததில்லை எனவும் வேதனை தெரிவிக்கின்றர்.

மேலும் கிராமத்தில் உள்ள பெற்றோர்கள் தன் பிள்ளை பாதுகாப்புடன் விடுதியில் இருப்பதாக எண்ணி அச்சமின்றி இருந்துவரும் சூழலில் இதுபோன்று அதிகாரிகளின் அலட்சியத்தில் பாதுகாப்பே இல்லாமல் தனிமையில் எது நடந்தாலும் உதவிக்கோ அல்லது மற்றவர்களுக்கு தகவல் தெரிவிக்கவோ முடியாமல் அச்சத்துடன் தங்கி படித்தும் வரும் மாணவனின் நிலையை பார்க்கும்போது பார்பவர்களை நெஞ்சம் நெகிழ வைக்கிறது. மாவட்ட நிர்வாகம் தனிமையில் உள்ள மாணவனுக்கு தரமான உணவும் பாதுகாப்பும் வழங்கிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

இதனை தொடர்ந்து சம்பவம் குறித்து தகவல் அறிந்த  மாவட்ட ஆட்சியர் கந்தசாமி உத்தரவின்பேரில் உதவி ஆட்சியர் ஆனந்தமோகன் விடுதிக்கு நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது விடுதி காப்பாளர் ஜெயகொடி மற்றும் விடுதி சமையலர் கோபால் இருவரையும் நேரில் அழைத்து விசாரனை மேற்கொண்டார். 50 பேருக்கு வருகைபதிவேட்டில் வருகை பதிவுசெய்து கணக்கு காட்டுவதற்காக முறையாக ஆவணங்கள் ஏதும் காட்டாமலும் பல முறைகேடுகள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு மாவட்ட ஆட்சியரின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதேபோன்று இந்த விடுதியில் மட்டுமல்லாது செங்கம் பகுதியில் உள்ள பல்வேறு விடுதிகளில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கபடும் என உறுதி அளித்து சென்றார்.

தலைப்புச்செய்திகள்