Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மேட்டூர் அணை நீர்த்தேக்க பகுதியில் மீண்டும் முகாம் அமைக்கும் மீனவர்கள்: மீன்பிடிக்க ஆயத்தம்

செப்டம்பர் 02, 2019 07:56


மேட்டூர்: மேட்டூர் அணை நீர்த்தேக்க பகுதியில் தண்ணீர் நிரம்பி உள்ளதால், காவிரி கரையில் மீன்பிடிப்பதற்காக மீனவர்கள் மீண்டும் முகாம் அமைக்க தொடங்கியுள்ளனர். மேட்டூர் அணையில் கட்லா, ரோகு, மிர்கால், கெழுத்தி, கெண்டை, ஆரால், அரஞ்சான் உள்பட 20 வகையான மீன்கள் பிடிபடுகின்றன. சுமார் 60 சதுர மைல் பரப்பு கொண்ட நீர்த்தேக்க பகுதியில் 2 ஆயிரம் மீனவர்களும், 2 ஆயிரம் மீனவ உதவியாளர்களும் மீன்வளத்துறையின் உரிமம் பெற்று மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் அடிப்பாலாறு மற்றும் ஏமனூர், செட்டிப்பட்டி, கோட்டையூர், பண்ணவாடி, நாகமரை, சேத்துக்குளி, கீரைக்காரனூர், கூணாண்டியூர், மாசிலாபாளையம் உள்ளிட்ட பகுதிகளில், காவிரி கரையோரங்களில் முகாம் அமைத்து மீன்பிடி தொழிலில் குடும்பத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். 

கடந்த ஜூலை மாதம் இறுதி வரை, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 40 அடிக்கு குறைவாக இருந்தது. காவிரி நீரோடை போல் ஆனதால் மீன்கள் கிடைக்காமல், மீனவர்கள் தங்களது முகாம்களை காலி செய்து கொண்டு சொந்த கிராமங்களுக்கு திரும்பினர். ஜூலை இறுதியில் கர்நாடகா மற்றும் கேரள மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பி, உபரிநீர் வெளியேற்றப்பட்டது. உபரிநீர் வரத்து காரணமாக 40 அடிக்கும் குறைவாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து, தற்போது 118 அடியை நெருங்கி வருகிறது. 

இதனையடுத்து, சொந்த கிராமங்களுக்கு சென்றிருந்த மீனவர்கள் மீண்டும் அடிப்பாலாறு, ஏமனூர், செட்டிப்பட்டி, கோட்டையூர் பகுதிக்கு திரும்பி, முகாம் அமைத்து வருகின்றனர். தற்போது, எதிர்பாராத அளவிற்கு மீன்கள் கிடைக்கவில்லை என்றாலும், 60 நாட்களுக்கு பின்பு தங்களுக்கு மீன்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது என்று மீனவர்கள் தெரிவித்தனர். இதனால், வெறிச்சோடி காணப்பட்ட காவிரி கரை பகுதிகளில், மீனவர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

தலைப்புச்செய்திகள்