Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சபரிமலை விவகாரம்: கேரள அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என பினராயி விஜயன் தகவல்

ஆகஸ்டு 30, 2019 04:59

திருவனந்தபுரம்: பாராளுமன்ற தேர்தலில் கேரளாவில் ஆளும் கூட்டணி படுதோல்வி அடைந்தது. இதற்கு சபரிமலை விவகாரமே காரணம் என பா.ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குறைகூறி வருகின்றன. ஆனால் இதை முதல்-மந்திரி பினராயி விஜயன் மீண்டும் நிராகரித்து உள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

பாராளுமன்ற தேர்தலிலும், பாலா சட்டசபை இடைத்தேர்தலிலும் ஆளும் கூட்டணி தோல்வியடைந்ததற்கு சபரிமலை விவகாரமே காரணம் என யாரும் நினைக்க தேவை இல்லை. பா.ஜனதா எப்போதும் சபரிமலையை பயன்படுத்தும். ஆனால் அது எங்களை பாதிக்காது.

சபரிமலை விவகாரத்தில், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக பாராளுமன்றத்தில் அவசர சட்டம் கொண்டு வருவோம் என பா.ஜனதாவினர் ஏற்கனவே கூறியிருந்தனர். ஆனால் தற்போது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக சட்டம் கொண்டு வரமுடியாது என வெளிப்படையாக கூறுகின்றனர். இது, அவர்களை நம்பியவர்களை ஏமாற்றுவது இல்லையா?

எனவே இது அவர்களைத்தான் பாதிக்கும், எங்களை அல்ல. சபரிமலை பக்தர்களுக்கு துணை நிற்போம் என்பதை நாங்கள் தெளிவுபடுத்தி விட்டோம். இதைத்தான் கட்சியின் ஒவ்வொரு மட்டத்திலும் தெரிவித்து வருகிறோம்.

சபரிமலை விவகாரத்தில் மாநில அரசின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்துவதே எங்கள் நிலைப்பாடு. இந்த பிரச்சினையில் கோர்ட்டு வேறு ஏதாவது உத்தரவிட்டால், அதன்படிதான் செயல்படுவோம்.

நமது நாடு அரசியல் சட்டப்படியே ஆளப்படுகிறது. அரசியல் சட்டப்படிதான் நாம் செயல்பட முடியும். இந்த சட்டத்தை திருத்துவதற்கு பலதரப்பும் விரும்புகின்றன. அது வேறு விஷயம். தற்போதைய நிலையில் அரசியல் சட்டப்படிதான் நாம் செயல்பட முடியும் என பினராயி விஜயன் கூறினார்.

தலைப்புச்செய்திகள்