Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கும்பகோணம் இளைஞரை கரம் பிடித்த ஜப்பானிய பெண்

ஆகஸ்டு 25, 2019 12:41

கும்பகோணம்: கும்பகோணம் மோதிலால் தெருவைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் கிருஷ்ணவேணி தம்பதி. இவர்களது மகன் வசந்தன் கடந்த 7 ஆண்டுகளாக ஜப்பானில் ஆராய்ச்சி கல்வியை முடித்து அங்கேயே பணி புரிகிறார்.

இந்நிலையில் வசந்தனுக்கு முகநூல் மூலம் அறிமுகமானார் மேகுமி. இவர் அங்கு வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். அறிமுகம் நாளடைவில் காதலாக மலர்ந்து இருவரும் திருமணம் செய்து கொள்வதாய் முடிவெடுத்தனர்.

இருவரது பெற்றோருடைய சம்மதத்தையும் பெற்ற வசந்தனுக்கும், மேகுமிக்கும் கும்பகோணத்தில் உள்ள திருமண மண்டபத்தில் இன்று தமிழ் கலாச்சாரப்படி திருமணம் நடைபெற்றது.

மணப்பெண்ணின் பெற்றோர் வர இயலாததால் மணமகனின் தாய் மாமன் பெண்ணின் பெற்றோராய் இருந்து சம்பரதாயங்கள் செய்யப்பட்டு அம்மி மிதித்து அருந்ததி பார்த்து காலில் மெட்டி அணிவித்து பெற்றோர் ஆசீர்வாதத்துடன் அச்சதை தூவ ஜப்பானிய பெண்ணுடன் இல்வாழ்க்கையில் கரம் கோர்த்தார் வசந்தன். 

இத்திருமணத்திற்கு வந்திருந்த மணமகளின் தங்கை, நண்பர்கள் மற்றும் உறவினர்கள் தமிழ்க் கலாச்சாரப்படி வேட்டி, புடவை அணிந்து மணமகனின் உறவினர்களை கை கூப்பி வணக்கம் தெரிவித்தது வாழ்த்த வந்திருவர்களை நெகிழ வைத்தது.

இந்த திருமண வைபவ காட்சிகள் அனைத்தும் இணையம் மூலமாக ஜப்பானில் இருந்தபடியே மணப்பெண்ணின் பெற்றோர் கண்டு ஆசீர்வதித்தனர்.

முகநூல் மூலம் நட்பை ஏற்படுத்தி பின்னர் அது பாதை மாறி வாழ்க்கையை தொலைத்தவர்கள் அதிகம்.  ஆனால் முக நூல் மூலம் அறிமுகமாகி இன்று இரு தரப்பு பெற்றோரின் ஆசீர்வாதத்துடன் வசந்த வாழ்க்கையில் அடியெடுத்து வைத்துள்ள வசந்தன், மேகுமி தம்பதியை உறவினர்களோடு சேர்ந்து நாமும் வாழ்த்துவோம்..

காதலித்து திருமணம் செய்ய போகும் காதலர்கள் பெற்றோர்களின் சம்மதத்துடன் அவர்கள் முன்னிலையில் ஆசிர்வதிக்கப்பட்டு திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்றனர் இத்தம்பதியினர். 

தலைப்புச்செய்திகள்