Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வியாபாரியை தாக்கிய 5 பேரை அமைப்பில் இருந்து நீக்கி விஷ்வ ஹிந்து பரிஷத் உத்தரவு

ஆகஸ்டு 20, 2019 08:41

திருப்பூர்: திருப்பூர் அருகே முதலிபாளையம் சிட்கோ பகுதியில் சிவா என்பவர் மின்னணு சாதனங்கள் விற்பனை கடை வைத்துள்ளார். இவரது கடைக்கு சென்ற விஷ்வ ஹிந்து அமைப்பை சேர்ந்தவர்கள் வியாபாரத்தை கவனித்துக் கொண்டிருந்த சிவாவின் உறவினரிடம் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு கிருஷ்ணர் சிலை வைக்க வேண்டும் எனக் கூறி பணம் கேட்டுள்ளனர். 

இதையடுத்து ரூ.300 கொடுத்த நிலையில், மீண்டும் கடைக்கு வந்து கூடுதல் பணம் கேட்டு மிரட்டியதாகக் கூறப்படுகிறது. சிவாவின் உறவினர் கொடுக்க மறுக்கவே இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது விசுவ இந்து பரிஷத்தின் புறநகர் மாவட்ட செயலாளர் வசந்த் மற்றும் விக்னேஷ் உள்ளிட்ட சிலர் சிவாவின் உறவினரை தாக்கியதோடு கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இந்தக் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவிலும் பதிவாகி இருந்தது.

இது குறித்து கடையின் உரிமையாளர் சிவா கொடுத்த புகாரை அடுத்து வசந்த் மற்றும் விக்னேஷ் உள்ளிட்ட 5 பேர் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள விஸ்வ ஹிந்து பரிஷத் புறநகர் மாவட்ட செயலாளர் வசந்த், பொதுமக்களின் பங்களிப்போடு கிருஷ்ண  ஜெயந்தி விழாவை நடத்துவதற்கு பணம் வசூலித்தாகவும் சம்பந்தப்பட்ட கடைக்காரரிடம் பணம் கேட்டு வற்புறுத்தவில்லை என்றும் தெரிவித்தார். 

இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்பைச் சேர்ந்த சிலர் தங்கள் மீது காவல் துறை பொய் வழக்கு பதிவதற்கு காரணமாக இருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். இதற்கிடையே கடைக்காரரிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டவர்களை நீக்கம் செய்து விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு உத்தரவிட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்