Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

லீக்கான பெங்களூர் போலீஸ் கமிஷனர் ஆடியோ உரையாடல்

ஆகஸ்டு 17, 2019 11:34

பெங்களூர்: பெங்களூர் போலீஸ் கமிஷனர் பாஸ்கர் ராவ் அந்தப் பதவியைப் பெறுவதற்கு இடைத்தரகர் ஒருவரிடம் பேரம் பேசியதாக வெளியாகியுள்ள ஆடியோ பதிவு கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குமாரசாமி தலைமையிலான மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது, போலீஸ் அதிகாரிகள், அரசியல்வாதிகளின் தொலைபேசி ஒட்டு கேட்கப்பட்டுள்ளதற்கு, இது ஒரு சாட்சி என்று பாஜக தரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. 

கர்நாடகாவில் நடைபெற்றுவந்த குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் கவிழ்ந்தது. இதையடுத்து எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி அங்கு அமைந்துள்ளது. ஆட்சிக்கு வந்த உடனேயே பல உயர் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்தார், எடியூரப்பா. அதில் பெங்களூர் போலீஸ் கமிஷனராக பதவி வகித்த அலோக் குமார் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக பாஸ்கர் ராவ் கமிஷனராக நியமிக்கப்பட்டார். 

இந்த நிலையில் பாஸ்கர் ராவ் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மேலிட தலைவர்களுக்கு நெருக்கமானவராக அறியப்படும் பராஸ் என்பவர் நடுவே, குமாரசாமி ஆட்சி காலத்தில் நடைபெற்ற தொலைபேசி உரையாடல் இப்போது டிவி சேனலில் வெளியாகி உள்ளது. தனது சீனியர்களை புறந்தள்ளிவிட்டு தனக்கு பெங்களூர் நகர போலீஸ் கமிஷனர் பதவியை வாங்கித் தரும்படி பாஸ்கர் ராவ் கோரிக்கை விடுப்பது போல அந்த ஆடியோ உள்ளது. இந்த நிலையில் எடியூரப்பா ஆட்சிக்கு வந்ததுமே பாஸ்கர் ராவ் கமிஷனராக பணி நியமனம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து அலோக் குமார் மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

ஜூலை மாதத்தில்தான் கமிஷனராக தனக்கு பணியிடம் ஒதுக்கப்பட்டதாகவும், ஆனால், பதவியேற்று சில வாரங்களில் தன்னை பணியிட மாற்றம் செய்தது செல்லாது என்று அறிவிக்க கோரியும் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த நிலையில் பாஸ்கர் ராவ் தொடர்பாக வெளியாகியுள்ள இந்த ஆடியோ தொடர்பாக அலோக் குமார் நிருபர்களிடம் கூறுகையில், "நிதி மோசடி வழக்கு தொடர்பாக குற்றப் பின்னணி கொண்ட பராஸ் என்பவரின், தொலைபேசி அழைப்புகளை காவல்துறை டிராக் செய்து வந்தது. அப்போது பதிவு செய்யப்பட்ட உரையாடல் தான் இது, என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

அதாவது இந்த ஒலிநாடா ஒட்டு கேட்கப்பட்ட நாளில், பெங்களூர் நகர குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனராக அலோக் குமார் பதவி வகித்து வந்தார். கிரிமினல்களின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்பது உள்ளிட்ட விவகாரங்களை கவனித்து இவரது அதிகாரத்தின் கீழ் தான் இருந்தது. அப்போது பாஸ்கர் ராவ் பேசியதும் தொலைபேசியில் பதிவாகி இருப்பதாக தெரிகிறது. ஆனால், இப்போது அலோக் குமார் மற்றும் பாஸ்கர் ராவ் நடுவே பெங்களூர் கமிஷனர், பதவிக்கான பனிப்போர் நிலவுவதால் இந்த ஆடியோ எப்படியோ டிவி சேனல் வழியாக வெளியே வந்து விட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இதனிடையே பாஸ்கர் ராவ் உரையாடியது தொலைபேசியில் ஒட்டு கேட்கப்பட்டது போல, பாஜக தலைவர்கள், காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் பல உயர் அதிகாரிகள் தொலைபேசியும் குமாரசாமி ஆட்சி காலத்தில் ஒட்டு கேட்கப்பட்டு இருக்கலாம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது கர்நாடக அரசியலில் புதிய புயலைக் கிளப்பியுள்ளது.
 

தலைப்புச்செய்திகள்