Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க நடவடிக்கை

ஆகஸ்டு 16, 2019 11:58

புதுடெல்லி: வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய சட்ட அமைச்சகத்திற்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.  

ஒருவருக்கு ஒரு வாக்கு என்பதை உறுதிப்படுத்துவதற்கும், வாக்களிப்பதில் மோசடிகளை தவிர்ப்பதற்கும் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதை கட்டாயமாக்க வேண்டும் என தேர்தல் ஆணையம்  கூறிவருகிறது.

வாக்காளர்கள் தாங்களாக முன்வந்து ஆதார் எண்ணை இணைக்கலாம் என முதலில் கூறிவந்த தேர்தல் ஆணையம், இதற்கான  வழிகாட்டு நெறிமுறைகளை 2015ஆம் ஆண்டில் வெளியிட்டது.

ஆனால் அப்போது உச்சநீதிமன்றம் இதற்கு இடைக்கால தடை விதித்தது. பின்னர், வாக்காளர்களின் ஆதார் விவரங்களை இணைப்பதற்கு அனுமதி கோரி தேர்தல் ஆணையம்  2017ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தில் மனுச் செய்தது.

இதுவரை 32 கோடி வாக்காளர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். இதை அனைத்து வாக்காளர்களுக்கும் விரிவுபடுத்தும் வகையில், வாக்காளர் அட்டை-ஆதார் எண் இணைப்பை கட்டாயமாக்க வேண்டும் என்ற நிலையை தேர்தல் ஆணையம்  2016ஆம் ஆண்டில் எடுத்தது.

இதற்கான சட்டபூர்வ நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய சட்ட அமைச்சகத்திற்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. போலி வாக்காளர்களை அடையாளம் கண்டு நீக்குவதற்கும், கள்ள ஓட்டு போடுவதை தடுப்பதற்கும் வாக்காளர் அட்டை-ஆதார் எண் இணைப்பு உதவும் என தேர்தல் ஆணையம் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

இதற்காக மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தங்கள் செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் மத்திய சட்ட அமைச்சகத்தை தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. 
 

தலைப்புச்செய்திகள்