Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் 4 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு: காப்பக நிர்வாகி கைது

ஆகஸ்டு 12, 2019 12:37

மதுரை: மதுரை அருகே ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் தங்கியிருந்த 4 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தொடர்பாக காப்பக நிர்வாகி கைது செய்யப்பட்டார்.

மதுரை சமயநல்லூரில் ‘மாஷா டிரஸ்ட் ’ என்ற பெயரில் ஆதரவற்ற குழந்தைகளுக்கான காப்பகம் ஒன்று செயல்படுகிறது. இந்த காப்பகத்துக்கு மதுரை மாவட்டம், கருமாத்தூரைச் சேர்ந்த ஞானபிரகாசம், நாகமலைபுதுக்கோட்டையைச் சேர்ந்த ஆதிசிவன் (41) ஆகிய இருவரும் பொறுப்பாளர்களாக உள்ளனர்.

இக் காப்பகத்தில் 25-க்கும் மேற்பட்ட ஆதரவற்ற சிறுவர், சிறுமியர்கள் தங்கி, பல்வேறு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்புகளில் படிக்கின்றனர். இங்குள்ள சிறுமிகளுக்கு பாலியல் ரீதியான தொந்தரவு நடப்பதாக ஏற்கெனவே சமயநல்லூர் காவல் துறையினருக்கு தகவல் சென்றது. இருப்பினும், போலீஸார் அதற்கான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.

இந்நிலையில் மதுரை மாவட்ட குழந்தைகள் நல அலுவலகதுக்கும் சில புகார்கள் சென்றன.

இதனையடுத்து மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் சண்முகம் அந்த காப்பகத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அவர், அங்குள்ள சிறுவர், சிறுமியர்களை தனித்தனியே விசாரித்து, தகவல் சேகரித்தார். விசாரணையில், குறிப்பிட்ட 4 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்யப்பட்டது தெரியவந்தது.

ஆதிசிவன் என்பவர் தனது அறைக்கு அழைத்துச்சென்று, சிறுமிகளை கட்டாயப்படுத்தி பலமுறை பாலியல் தொந்தரவு செய்திருப்பதும், இது பற்றி வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவோம், காப்பகத்தைவிட்டு வெளியே அனுப்பிவிடுவோம் என மிரட்டியதும் தெரிந்தது.

இதனையடுத்து மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் சண்முகம் சம்பந்தப்பட்ட 4 சிறுமிகளையும் மீட்க நடவடிக்கை எடுத்தார். அவர்கள் மதுரை முத்துப்பட்டியிலுள்ள காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். எஞ்சிய குழந்தைகளையும் முத்துப்பட்டி காப்பகத்திற்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் சண்முகம் சமயநல்லூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல் ஆய்வாளர் கிரேஸ் சோபியா விசாரணை நடத்தினார். இந்த விசாரணையின் அடிப்படையில் ஆதிசிவன் மீது ‘போக்ஸோ’ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, அவரை இன்று (திங்கள்கிழமை) போலீஸார் கைது செய்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து காப்பகத்தின் மற்றொரு நிர்வாகியான ஞானபிரகாசத்திடமும் போலீஸார் விசாரிக்கின்றனர்.

இதற்கிடையில் காப்பகத்திற்கு எதிராக மேலும் சில புகார்களும் வந்துள்ளதால் காப்பகத்தை சீல் வைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த 4 சிறுமிகள் தவிர, பிற சிறுமிகளுக்கும் அவர் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாகவும் தகவல் வெளியாகிறது. அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் திட்டமிட்டு இருப்பதாக சமயநல்லூர் மகளிர் போலீஸார் தெரிவிக்கின்றனர்.

குழந்தைகள் பாதுகாப்பு நலக்குழு உறுப்பினர் சண்முகத்திடம் கேட்டபோது, "இச் சம்பவம் தொடர்பான விசாரணை தகவல்களை சமயநல்லூர் மகளிர் போலீஸில் ஒப்படைத்துள்ளோம். அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். 4 சிறுமிகள் தவிர மேலும், சிலர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். அதுபற்றியும் தொடர்ந்து விசாரிக்கிறோம்" என்றார்.
 

தலைப்புச்செய்திகள்