Thursday, 23rd May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சொந்தச் செலவில் ஆதரவற்றோர் உடல்களை அடக்கம் செய்கிறார் பெண் ஏட்டு

ஆகஸ்டு 11, 2019 01:18


திண்டுக்கல்: திண்டுக்கல் பெண் ஏட்டு, ஆதரவற்றோரின் உடல்களை சொந்தச் செலவில் அடக்கம் செய்து, இறுதிச்சடங்குகளிலும் பங்கெடுத்து வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல், நாகல் நகரில் சந்தைப்பேட்டை அருகே கடந்த 2ம் தேதி, 45 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் இறந்து கிடந்தார். இப்பகுதியினர் தெரிவித்த தகவலின்பேரில், திண்டுக்கல் நகர் தெற்கு சிறப்பு எஸ்ஐ அழகர்சாமி, ஏட்டு தேன்மொழி சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார், எந்த ஊர் என்ற விவரம் தெரியவில்லை.

யாரும் முன் வராததால் பிரேத பரிசோதனைக்கு பிறகு போலீசாரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. இறுதிச்சடங்குகள் செய்ய யாரும் இல்லாததை அறிந்த ஏட்டு தேன்மொழி, தனது சொந்த செலவில் அடக்கம் செய்ய முடிவு செய்தார். தொடர்ந்து வேடப்பட்டியில் உள்ள மயானத்திற்கு உடல் கொண்டு வரப்பட்டு இறுதிச்சடங்கு செய்யப்பட்டு புதைக்கப்பட்டது. விசாரணை நடத்திய பெண் ஏட்டு, ஆதரவற்ற நபரின் உடலை சொந்தச் செலவில் அடக்கம் செய்த படங்கள், தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி, அவருக்கு பாராட்டுகளை குவித்து வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம், மேலசிவபுரியைச் சேர்ந்த தேன்மொழிக்கு, கணவர் சுப்பிரமணியன், 2 குழந்தைகள் உள்ளனர். சுப்பிரமணியன் சிறுமலையில் விஏஓவாக பணியாற்றி வருகிறார்.

ஏட்டு தேன்மொழி கூறுகையில், ‘‘நான் போலீஸ் வேலைக்கு 2003ல் சேர்ந்தேன். போலீஸ் பணி கடினமானது என பலர் கூறியபோதும் விரும்பி ஏற்றுக் கொண்டேன். சாலையில் சுற்றித்திரியும் கைவிடப்பட்டவர்களை, பார்க்கும்போதெல்லாம் மனம் வலிக்கும். இவர்கள் இறந்ததும் அனாதைப் பிணம் என்கின்றனர். ஒவ்வொரு மனிதரும் மற்றவர்களுக்கு முடிந்த அளவு உதவியாக இருக்கும் வரை, யாரும் அனாதை இல்லை. ஏற்கனவே ஒரு மாதத்திற்கு முன்பு ஒரு உடலைப் புதைக்க உதவினேன். நானே நேரடியாக இறுதிச்சடங்கில் ஈடுபடுவது நிறைவளிக்கிறது. முடிந்தவரை இப்பணியை என் வாழ்வில் தொடர்வேன். ஆதரவற்ற பிணமாக மாறும் நிலை யாருக்கும் வரக்கூடாது’’ என்றார்.

தலைப்புச்செய்திகள்