Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வீட்டுக்காவலில் உமர் அப்துல்லா, மெகபூபா முக்தி: தகவல் தொடர்பு முற்றிலும் துண்டிப்பு

ஆகஸ்டு 05, 2019 03:45

காஷ்மீர்: காஷ்மீரில் உச்சகட்ட பதற்றத்திற்கு மத்தியில் முன்னாள் முதலமைச்சர்கள் உமர் அப்துல்லா, மெகபூபா முக்தி ஆகியோர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீநகர், ஜம்மு உள்ளிட்ட மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிட்டுக்கப்பட்டுள்ளது. இணையதள சேவை முடக்கப்பட்டு, பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது.

காஷ்மீர் எல்லைப் பகுதி வழியாக தீவிரவாதிகள் ஊடுருவ முயற்சிப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று முன்தினம் 35 ஆயிரம் வீரர்கள் கூடுதலாக அனுப்பி வைக்கப்பட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்பட்டு யாத்திரீகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் உடனடியாக வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்டது. பள்ளி, கல்லூரிகள் காலவரையின்றி விடுமுறை அறிவிக்கப்பட்டதுடன், மாணவர்கள் விடுதியில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டனர்.

காஷ்மீர் நிலவரம் குறித்து டெல்லியில் உள்துறை செயலாளர் ராஜீவ் கவ்பா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோருடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசித்தார்.

இதற்கிடையே, ஸ்ரீநகரில் தேசிய மாநாட்டுக்கட்சி தலைவர் பரூக் அப்பதுல்லா இல்லத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் முதலமைச்சரும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய பரூக் அப்துல்லா, காஷ்மீரில் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் செயல்களில் இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் ஈடுபடக் கூடாது என்று கேட்டுக் கொண்டார்.

ஜம்மு காஷ்மீரின் அடையாளம், தன்னாட்சி, சிறப்பு அந்தஸ்திற்கு எதிரான தாக்குதல்களை முறியடிக்க அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்படுவது என கூட்டத்தில் முடிவெடுத்துள்ளோம். இந்த பிரச்னையில் குடியரசு தலைவரும், பிரதமரும் தலையிட்டு உரிய தீர்வுகாண வலியுறுத்துவது என அனைத்து கட்சிகளும் தீர்மானித்துள்ளன.

காஷ்மீரில் பதற்றம் அதிகரித்தும் வரும் நிலையில், முன்னாள் முதலமைச்சர்கள் உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி, ஜம்மு காஷ்மீர் மக்கள் கான்ப்ரன்ஸ் கட்சி நிர்வாகி சஜத் லோன் ஆகியோர் நள்ளிரவில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.

இதுதொடர்பாக தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள உமர் அப்துல்லா, மாநில நலனில் உண்மையான அக்கறையில்லாதவர்கள் தான் வன்முறையை கட்டவிழ்த்துவிடுவார்கள் என்று குறிப்பிடுட்ள்ளார். இந்த சூழ்நிலையிலும், தனது நம்பிக்கையை கைவிட வில்லை என்றும் மக்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

காஷ்மீர் மக்களின் குரல் நசுக்கப்படுவதை உலகமே பார்த்துக் கொண்டிருப்பதாகவும், இந்தியாவே விழித்தெழு என்றும் மெகபூபா முப்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வீட்டுக் காவல் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர், எந்த தவறும் செய்யாத தலைவர்களை நள்ளிரவில் கைது செய்யப்பட்டிருப்பது ஏன் என கேள்வியெழுப்பியுள்ளார்.

இதற்கிடையே, ஸ்ரீநகர், ரேஷி, ஜம்முவில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. உதம்பூர், கத்வா, தோடா உள்ளிட்ட பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை தடை உத்தரவு அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இணைய சேவை தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

இந்நிலையில், இன்று காலை 9.30 மணிக்கு பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் காஷ்மீர் விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டு, முக்கிய முடிவு எடுக்கப்படும் என்றும், நாடாளுமன்ற இரு அவைகளிலும் அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, காஷ்மீர் நிலவரம் குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அவசர ஆலோசனை மேற்கொண்டார். தேசிய பாதுகாப்பு குழுவுடன் நடைபெற்ற இந்த ஆலோசனையின்போது இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பிரச்னை பிராந்திய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று எச்சரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

தலைப்புச்செய்திகள்