Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மாதம் ரூ.106 குறையும் அரசு கேபிள் டி.வி. கட்டணம் அதிரடி குறைப்பு: முதல்-அமைச்சர்

ஆகஸ்டு 01, 2019 02:56

சென்னை: தமிழகத்தில் 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கேபிள் டி.வி. தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அரசும், கேபிள் டி.வி. நிறுவனத்தை கடந்த 2011-ம் ஆண்டு முதல் நடத்தி வருகிறது. தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) வகுத்த புதிய வரைமுறையின்படி, கேபிள் டி.வி. கட்டணம் கிடுகிடுவென அதிகரித்து உள்ளது.

மாதம் ரூ.130 கட்டணத்தில் பல்வேறு டி.வி. சேனல்களை கண்டுகளித்த மக்கள் இன்று, ரூ.250 செலவு செய்தும் குறிப்பிட்ட சேனல்களை மட்டுமே பார்க்க முடிகிறது. எனவே கேபிள் டி.வி. கட்டணத்தை குறைக்கவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தன.

இந்தநிலையில் சென்னை எழும்பூரில் உள்ள அரசு கேபிள் டி.வி. தலைமை அலுவலகத்தில் கேபிள் டி.வி. கட்டணத்தை குறைப்பது தொடர்பாக மாவட்ட அளவிலான கேபிள் டி.வி. ஆபரேட்டர் குழு நிர்வாகிகள், தாசில்தார்கள், கட்டண சேனல்கள் உரிமையாளர்கள் ஆகியோருடன் அமைச்சரும், அரசு கேபிள் டி.வி. நிறுவன தலைவருமான உடுமலை ராதாகிருஷ்ணன், நிர்வாக இயக்குனர் சங்கர் ஆகியோர் தனித்தனியாக ஆலோசனை நடத்தினர்.

இதுதொடர்பாக நிருபர்களிடம் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறுகையில், “கேபிள் டி.வி. கட்டணம் குறைப்பது தொடர்பான தகவலை ஓரிரு நாளில் முதல்-அமைச்சர் அறிவிப்பார்’, என்று தெரிவித்தார்.

இந்தநிலையில் அரசு கேபிள் டி.வி. கட்டணத்தை அதிரடியாக குறைத்து தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பொதுமக்கள் குறைந்த கட்டணத்தில் நிறைந்த சேவையை பெறுவதற்காக தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம், கடந்த 2011-ம் ஆண்டு மே மாதம் ஜெயலலிதாவால் புத்துயிர் ஊட்டப்பட்டு சந்தாதாரர்களுக்கு மிக குறைந்த கட்டணத்தில் 100 சேனல்களை வழங்கி வந்தது.

தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம், இதுவரை 36 லட்சம் ‘செட்-டாப்’ பாக்ஸ்கள் கொள்முதல் செய்து, சுமார் 35 லட்சத்து 12 ஆயிரம் ‘செட்-டாப்’ பாக்ஸ்கள் சந்தாதாரர்களுக்கு இலவசமாக வழங்கி உள்ளது. தற்போது தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் பொதுமக்கள் அதிகம் விரும்பும் சேனல்களை வழங்கி வருகிறது.

தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு முழுவதும் (வேலூர் மாவட்டம் நீங்கலாக) வருகிற 10-ந்தேதி முதல் ரூ.130+ஜி.எஸ்.டி. என்ற மாத சந்தா கட்டணம் நிர்ணயித்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தமிழக அரசின் இந்த கேபிள் டி.வி. கட்டண குறைப்பு தொடர்பான அறிவிப்பை பொதுமக்கள் வரவேற்பதுடன், மகிழ்ச்சியையும் தெரிவித்து உள்ளனர்.

தலைப்புச்செய்திகள்