Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மேட்டூர் அணை நீர்மட்டம் 50 அடியை நெருங்குகிறது

ஜுலை 31, 2019 05:13

மேட்டூர் : கடந்த வாரம் 39.13 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து 50 அடியை நெருங்கியுள்ளது.  

கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. தற்போது தென்மேற்கு மழையின் தீவிரம் சற்று குறைந்தால் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. அணையில் இருந்து 7 ஆயிரத்து 927 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. 124.8 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் தற்போது 87.13 அடியாக உள்ளது.

இதே போல கடந்த வாரம் கபினி அணைக்கு 7 ஆயிரம் கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் வந்த நிலையில் தற்போது நீர்வரத்து 3 ஆயிரத்து 490 கன அடியாக சரிந்துள்ளது. அணையில் இருந்து 5 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 84 அடி உச்சநீர்மட்டம் கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் தற்போது 73 அடியாக உள்ளது.

இதனால் 2 அணைகளில் இருந்தும் திறந்து விடப்பட்ட 12 ஆயிரத்து 927 கன அடி தண்ணீர் தமிழகத்திற்கு காவிரியில் வந்து கொண்டிருக்கிறது. ஒகேனக்கலில் நேற்று முன்தினம் 9 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து 9 ஆயிரத்து 500 கன அடியாக அதிகரித்தது.

ஒகேனக்கலில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 8 ஆயிரத்து 400 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று  மேலும் அதிகரித்து 8 ஆயிரத்து 900 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 1000 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து மிக குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் ஒரு நாளைக்கு ஒரு அடிக்கு மேல் உயர்ந்து வருகிறது. கடந்த 23-ந் தேதி 39.13 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து நேற்று  46.49 அடியாக இருந்தது. இதனால் கடந்த 7 நாட்களில் மட்டும் நீர்மட்டம் 7 அடிக்கும் மேல் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இனி வரும் நாட்களில் இதே அளவுக்கு தண்ணீர் வந்தாலும் 3 நாட்களில் அணை நீர்மட்டம் 50 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்