Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

என் பள்ளிப்படிப்பை தமிழ் வழியில் தான் படித்தேன் - இஸ்ரோ சிவன்

ஜுலை 30, 2019 01:11

சென்னை: தான் பள்ளியில் படிக்கும்போது அணிந்து கொள்ள செருப்பு கூட இல்லை என்றும், தான் முதன் முதலில் பேண்ட் அணிந்ததது தொழில்நுட்ப கல்லூரியில் சேர்ந்த பின்புதான் என்று சிவன் தெரிவித்துள்ளார்.

விண்வெளி ஆராய்ச்சி உலகை இந்தியா  மீது திரும்ப வைத்ததற்கு இவரும் ஒரு முக்கியமான  காரணம். எனினும், எந்தவித ஆடம்பரமும் இல்லாமல்  சாதாரணமாக இருக்கும் சிவன், படித்ததெல்லாம்  அரசுப்பள்ளியில் தான். அதுவும் தமிழ் வழிக்கல்வியில்  பயின்றவர் சிவன். எஸ்டி ஹிந்து கல்லூரியில் பிஎஸ்சி  கணிதத்தில் பட்டம் பெற்ற சிவன், மெட்ராஸ்  தொழில்நுட்பக் கல்லூரியில் ஏரோனாட்டிக்கல்  இஞ்சினியரிங் படிப்பை 1980ல் முடித்தார். முதுகலை  இஞ்சினியரிங் படிப்பை இந்திய அறிவியல் கல்லூரியில்  1982ல் முடித்தார். அதோடு, ஏரோஸ்பேஸ்  இஞ்சினியரிங் படிப்பில் பி.ஹெச்டி பட்டத்தை மும்பை  ஐஐடி-யில் பெற்றார்.

இளங்கலை அறிவியல் கணிதவியல்  படிப்பில் 100% மதிப்பெண் பெற்றதால் மனம் மாறிய  அவரது தந்தை, சிவனை மேற்படிப்பு படிக்க அனுமதித்துள்ளார். தனது சிறுவயதில் அணிந்துகொள்ள  ஷு-வோ, செருப்போ எதுவும் இல்லை என்றும் வெறும்  காலோடு தான் பள்ளிக்குச் சென்றுவந்ததாகவும்,  தந்தையின் விவசாயத்திற்கு உதவியதாகவும் சிவன்  தெரிவித்துள்ளார். மேலும், தான் கல்லூரி படித்து  முடிக்கும் வரை வேட்டியை மட்டுமே கட்டியதாகவும்;  மெட்ராஸ் தொழில்நுட்ப கல்லூரியில் சேர்ந்ததும் தான்  முதன்முதலில் பேண்ட் அணிந்ததாகவும் அவர்  தெரிவித்துள்ளார்.

முதுகலை இஞ்சினியரிங் படிப்பை முடித்திருந்த  சிவனுக்கு 1982ல் இஸ்ரோவில் வேலை கிடைத்தது.  அதுமுதல் கிட்டத்தட்ட 37 ஆண்டுகாலம் இஸ்ரோவில்  பணியாற்றியாற்றிய சிவன் பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி,  க்ரையோஜெனிக் எஞ்சின் உருவாக்கம், மீண்டும்  பயன்படுத்தும் வகையிலான செயற்கைகோள் ஏவும்  வாகனம் ஆகியவற்றின் உருவாக்கத்தில் பெரும் பங்கு  வகித்திருக்கிறார். விக்ரம் சாராபாய் விண்வெளி  ஆராய்ச்சி மையத்தின் இயக்குநராக கடந்த ஜனவரி  2018ல் நியமனம் செய்யப்பட்ட சிவன், இஸ்ரோவின்  அனைத்துவிதமான ராக்கெட் ஏவும் நிகழ்ச்சிகளிலும்  பங்குவகித்தவர் என்பதால் “ராக்கெட் மேன்” என்று  அழைக்கப்படுகிறார். இஸ்ரோவில், பணியாற்றிய சிவன்  செய்த சாதனைகளில் முக்கியமானது 2017ம் ஆண்டு  பிப்ரவரி 15ல் 104 செயற்கைக்கோள்களை விண்ணில்  வெற்றிகரமாக நிலைநிறுத்திய உலக சாதனையை  முன்னின்று நடத்தியது சிவன் தான்.

ஜுலை 15ம் தேதி விண்ணில் ஏவப்பட இருந்த  ஜிஎஸ்எல்வி-எம்கே3 சந்திரயான்-2 செயற்கைக்கோள்  விண்ணில் ஏவப்படும் நிகழ்வு கடைசிநேரத்தில்  தொழில்நுட்ப கோளாறு காரணமாக தற்காலிகமாக  நிறுத்தப்பட்டது. உடனடியாக உயர்மட்ட குழு ஒன்றை  அமைத்த சிவன் தொழில்நுட்ப கோளாரை 24  மணிநேரத்திற்குள்ளாக சரி செய்தார். விரைந்து  செயல்பட்டதால் ஜுலை 22ம் தேதி செயற்கைகோளை  விண்வெளியில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியது சிவன் தலைமையிலான வல்லுநர்கள் குழு. மான் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி தொழில்நுட்பக் கோளாறை உடனடியாக சரிசெய்து ஏழு நாட்களுக்குள் செயற்கைக்கோளை விண்வெளியில் வெற்றிகரமாக நிலை நிறுத்தியதற்காக பிரதமர் மோடி வெகுவாக பாராட்டு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்