Saturday, 11th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

குத்துவிளக்கு உற்பத்தியாளர்கள் கூலி உயர்வு கேட்டு வேலைநிறுத்தம்

ஜுலை 29, 2019 04:32

நாச்சியார்கோயில்: கும்பகோணத்தை அடுத்து உள்ள நாச்சியார்கோயிலில் வெண்கல குத்து விளக்கு உலக புகழ பெற்றதாகும். இங்கு அரையடிமுதல் 6 அடி வரை பித்தளை குத்து விளக்குகள் தயாரிக்கப்பட்டு, வெளி மாவட்டம், மாநிலம், நாடுகளுக்கு விற்பனையும் ஏற்றுமதியும் செய்யப்பட்டு வருகிறது.

குத்து விளக்கு என்று சிறப்பு பெற்ற நாச்சியார்கோயிலிலுள்ள கம்மாளர், மேல, அய்யம்பாளைத்தெரு உள்ளிட்ட 5 க்கும் மேற்பட்ட தெருக்களில் சுமார் 300 க்கும் மேற்பட்ட குத்து விளக்குபட்டறைகளும்நேரடியாக சுமார் 5 ஆயிரம் தொழிலாளர்களும், மறைமுகமாக சுமார் 1000 க்கும் மேற்பட்டோர் பித்தளை குத்து விளக்கு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள், நாச்சியார்கோயிலிலுள்ள 120 குத்து விளக்கு விற்பனையாளர்களிடமிருந்து மூலப்பொருட்களை பெற்று, குத்து விளக்குகளாக தயாரித்து கொடுப்பார்கள். அவர்கள் அதற்கென்ற கூலியை வழங்குவார்கள்.

விற்பனையாளர்களுக்கும், உற்பத்தியாளர்களுக்கும் இரண்டு வருடத்திற்கு ஒரு முறை கூலியை உயரத்துவது தொடர்பான பேச்சு வார்த்தை நடக்கும். அப்போது ஏற்படும் பேச்சு வார்த்தை முடிவின் படி கூலி வழங்கப்படும்.

இதே போல் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அப்போதைய நடப்பு கூலியான ரூ. 145 யுடன் 18 சதவீதம் சேர்த்து, அதாவது ரூ .171 ஆக உயரத்தி வழங்கினர்.

பின்னர் இரண்டாண்டு முடிந்த நிலையில்  நாச்சியார் கோயிலிலுள்ள சமத்துவ கூட்டத்தில் விற்பனையாளர்களுக்கும், உற்பத்தியாளர்களுக்கும் கூலி உயர்வு தொடர்பான பேச்சு வார்த்தை நடைபெற்றது. 

அப்போது விற்பனையாளர்கள் தரப்பில் வந்த நிர்வாகிகள், நடப்பு கூலியிலிருந்து ஒரு  கிலோவிற்கு ரூ. 10 உயரத்தி தருகிறோம் என்றனர். ஆனால் உற்பத்தியாளர்கள் தர்ப்பில் தலைவர் கலியமூரத்தி, செயலாளர்  தம்பிசீனிவாசன், பொருளாளர் ஈஸ்வரன்மூர்த்தி ஆகியோர்,  நடப்பு கூலியிலிருந்து,  எடை குறைந்த குத்து விளக்கிற்கு 80 சதவீதமும், எடை அதிகமுள்ள குத்து விளக்கிற்கு 50 சதவீதமும் கூலி உயர்த்தி தர வேண்டும் என்றனர்.

ஆனால் இதற்கு விற்பனையாளர்கள் ஒத்து கொள்ளாததால், உற்பத்தியாளர்கள் பித்தளை குத்து விளக்கிற்கு கேட்ட கூலி  உயர்வை வழங்கும் வரை காலவரையற்ற வேலை நிறுத்ததை தொடங்குவதாக தெரிவித்து வெளியேறினர்.

 இதனால் தினந்தோறும் ரூ. 2 கோடி இழப்பும், சுமார் 6 ஆயிரம் குத்து விளக்கு தொழிலாளர்கள் வாழ்வாதாரம் கேள்விகுறியாகியுள்ளது.

தலைப்புச்செய்திகள்