Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இயக்குனர் ரஞ்சித் திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டார்

ஜுலை 24, 2019 09:34

கும்பகோணம்: கும்பகோணத்தை அடுத்த திருப்பனந்தாள் கடை வீதியில் கடந்த ஜூன் 5ஆம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற திரைப்பட இயக்குனர் ரஞ்சித்ராஜராஜ சோழன் ஆட்சிக் காலம் தலித்துகளின் இருண்ட காலம் எனவும் ராஜராஜ சோழன் ஆட்சிக்காலத்தில் பெரும்பாலான பெண்கள் தேவதாசிகளாக உருவாக்கப்பட்டதாகவும். ராஜராஜ சோழன் ஆட்சி மிகவும் கேவலமான ஆட்சி எனவும் பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி விமர்சித்தார்.

இதனைத் தொடர்ந்து திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் இயக்குனர் ரஞ்சித் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்படாமல் இருப்பதற்காக முன்ஜாமீன் வழங்க கோரி ஐகோர்ட் கிளையில் ரஞ்சித் மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி கும்பகோணம் கோர்ட்டில் 15 நாட்களுக்குள் ரஞ்சித் ஆஜராகி இரு நபர் ஜாமீன் கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். அதன்படி நேற்று கும்பகோணம் கோர்ட்டில் ஆஜராகி இரு நபர் ஜாமீன் அளித்தார். அதை நீதிபதி ஏற்றுக்கொண்டு மூன்று நாட்களுக்கு திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் தினமும் காலை பத்து முப்பது மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கினார்.

அதன்படி காவல் நிலையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நீல புலிகள் இயக்கத்தினருடன் வருகை தந்து கையெழுத்திட்டார். இதனால் திருப்பனந்தாள் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
 

தலைப்புச்செய்திகள்